இலங்கைக்கு இந்தியஅரசினால் வழங்கப்பட்ட 5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ பாதுகாப்பு உபகரணங்கள்!
Tuesday, June 16th, 2026
…
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், இந்திய அரசாங்கத்தினால் 5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பாதுகாப்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
அக்குரேகொட இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில், இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்த உபகரணத் தொகுதியை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ,
இந்த நன்கொடையானது இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கிடையில் நிலவும் வலுவான மற்றும் நீண்டகால உறவின் மற்றொரு விசேட பிரதிபலனாகும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பானது பயிற்சி வாய்ப்புகள் மற்றும் மனிதநேய உதவிகளுக்கு அப்பால் சென்று, தற்காப்புத் திறன்களை வளர்த்தல், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் இராணுவ உபகரணங்களை வழங்குதல் வரை தற்போது விரிவடைந்துள்ளது.
மேலும், “சாகர் பந்து” (Sagar Bandhu) விசேட திட்டத்தின் கீழ், ‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா உடனடியாக வழங்கிய மனிதாபிமான உதவிகளையும் உயர்ஸ்தானிகர் இங்கு நினைவு கூர்ந்தார்.
அத்துடன், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், மருத்துவ உதவிகள் மற்றும் உள்கட்டமைப்பு மறுசீரமைப்புப் பணிகளை இலங்கை ஆயுதப் படைகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயற்படுத்திய விதம் குறித்தும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொன்த, ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சு சார்பாக இந்திய அரசாங்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
நெருக்கடியான காலகட்டங்கள், இயற்கை அனர்த்தங்கள், பொருளாதார மீட்சிச் செயற்பாடுகள், திறன் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றில் இந்தியா இலங்கைக்கு என்றும் நம்பிக்கையானதொரு பங்காளியாகத் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகப் பாதுகாப்புச் செயலாளர் இங்கு வலியுறுத்தினார்.
000
Related posts:
|
|
|


