அயர்லாந்து வரலாற்று வெற்றி!
Monday, June 29th, 2026
உலக சாம்பியனான இந்திய அணியை ஏதோ ஒரு போட்டியில் வீழ்த்துவது மட்டுமே பெரிய விஷயம். ஆனால், பெல்ஃபாஸ்ட் (Stormont) மைதானத்தில் இன்று நடந்த இரண்டாவது போட்டியிலும் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, 2-0 என தொடரைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இத்தனை வருடங்களாக அயர்லாந்து அணி சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு “சாதாரண” அணியாகவே பார்க்கப்பட்டது.
எத்தனையோ தோல்விகள், நூலிழையில் கைநழுவிய வெற்றிகள், திறமை இருந்தும் பெரிய அணிகளால் அங்கீகரிக்கப்படாத ஏக்கம் என அனைத்தையும் தாங்கி, ஒவ்வொரு அடியையும் அவர்கள் வலியோடுதான் கடந்து வந்திருக்கிறார்கள்.
இதற்கு முன்பு மாலஹைடில் நடந்த ஒரு போட்டியில் 225 ரன்களைத் துரத்தி, வெறும் 4 ரன்களில் இந்தியாவிடம் அயர்லாந்து தோற்றது. அன்று அந்த வீரர்கள் சிந்திய கண்ணீர்தான், இன்று அவர்களின் வெற்றிக் கொண்டாட்டமாக மாறியிருக்கிறது.
இந்த வாரத்திற்கு முன்பு வரை, டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை அயர்லாந்து வீழ்த்தியதே இல்லை. அந்த சாபத்தை உடைத்து, முதல் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, இன்று இரண்டாவது போட்டியில் கடைசி பந்து வரை பதற்றத்தை அடக்கி 1 ரன்னில் வென்றிருப்பது அசாத்தியமானது.
அயர்லாந்து கிரிக்கெட்டின் கடினமான காலங்களிலும் அணியைத் தாங்கிப் பிடித்த ஜார்ஜ் டாக்ரெல் போன்ற மூத்த வீரர்களுக்கும், அணியை வழிநடத்தும் இளம் கேப்டன் லார்கன் டக்கருக்கும் இந்த வெற்றி வெறும் ஒரு “Win” மட்டுமல்ல; அவர்களின் பல வருட உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம்!
இன்று கடைசி பந்து வீசப்பட்டு, 154 ரன்களைக் கட்டுப்படுத்தி வெற்றி பெற்ற அந்த நொடியில், மைதானத்தில் இருந்த உணர்ச்சிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. வீரர்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுத அழுத அழுகை, பெல்ஃபாஸ்ட் ரசிகர்களின் ஆரவாரம், சர்வதேச கிரிக்கெட்டிற்குள் இப்போதுதான் காலடி எடுத்து வைத்த மேட் ஹாலார்ட், ஜெய் மூந்த்ரா போன்ற இளம் வீரர்களின் முகத்தில் தெரிந்தது அந்தப் பேரானந்தம். இதுதான் கிரிக்கெட்.
பச்சை நிற உடையில் அயர்லாந்து வீரர்கள் மைதானத்திற்குள் ஓடிவந்து கொண்டாடிய அந்தப் பெருமிதம் நிறைந்த தருணம், கிரிக்கெட் வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய ஒன்று.
வாழ்த்துகள் அயர்லாந்து
Related posts:
|
|
|


