நியூசிலாந்துக்கு இன்னிங்ஸ் வெற்றி!

Monday, August 1st, 2016

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து- ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் புலவாயோவில் நடைபெற்றது.இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் வாக்னரின் அபார பந்து வீச்சால் அந்த அணி முதல் இன்னிங்சில் 164 ஓட்டங்களில் சுருண்டது. அபாரமாக பந்து வீசிய வாக்னர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி லாதம் (105), டெய்லர் (173), வாட்லிங் (107) ஆகியோரின் அபார சதத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 576 ஓட்டங்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.

இதனையடுத்து 412 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் ஜிம்பாப்வே அணி 2வது இன்னிங்சை தொடங்கியது.ஜிம்பாப்வே அணி 3வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 121 ஓட்டங்கள் எடுத்திருந்தது.எர்வின் 49 ஓட்டங்களுடனும், கிரீமர் 14 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். போல்ட் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இந்நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் தொடர்ந்து விளையாடிய எர்வின் சரியாக 50 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் கிரீமியர் உடன் வில்லியம்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 118 ஓட்டங்கள் குவித்தது.

கிரீமியர் 33 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, வில்லியம்ஸ் சதம் அடித்து அணியை இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து காப்பாற்ற முயற்சி செய்தார்.ஆனால் 119 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் ஜிம்பாப்வே அணி 79 ஓவர்கள் முடிவில் 295 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இதனால் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ட்ரென்ட்போல்ட் 4 விக்கெட்டுகளையும், சவுத்தி, வாக்னர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.முதல் டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகனாக 173 ஓட்டங்கள் எடுத்த ரோஸ் டெய்லர் தெரிவு செய்யப்பட்டார்.

Related posts: