வடக்குமாகாணவீதிப்பயணிகள்போக்குவரத்துஅதிகாரசபையின் அறிவிப்பு!
Tuesday, April 7th, 2026
காரைநகர் மார்க்கத்தில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச.) பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநருடன் பாரதூரமான முரண்பாட்டில் ஈடுபட்ட தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவருக்கு ஒரு மாத காலப் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த 02.04.2026 அன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான விசேட விசாரணைகள் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கிளிநொச்சி தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை (06.04.2026) நடைபெற்றன.
இந்த விசாரணையின்போது, தனியார் பேருந்து உரிமையாளர் இ.போ.ச. ஊழியர்களுடன் முரண்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார். இதனடிப்படையில், அவர் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் வழியனுமதிப் பத்திரத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு பேருந்திலும் பணியாற்றுவதற்கு, நேற்று (06.04.2026) தொடக்கம் எதிர்வரும் 05.05.2026 வரையான ஒரு மாத காலத்துக்கு முழுமையான பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் சேவையில் ஈடுபடும் தரப்பினரிடையே ஏற்படும் இவ்வாறான ஒழுக்க மீறல்கள், வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் செயற்பாடுகள், மேலதிக கட்டணம் அறவிடப்படுதல் அல்லது பயணிகள் வேறு ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொண்டால், எவ்வித தயக்கமுமின்றித் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) அதிகார சபைக்கு உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு தலைவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான முறைப்பாடுகளை 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்குப் பொதுமக்கள் உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது
000
Related posts:
|
|
|


