மனித நேயத்தை வென்ற மாமனிதரின் 26 ஆவது ஆண்டு சிரார்த்த தினம்!
Monday, June 20th, 2016
மனித நேயத்தை வென்ற மாமனிதர் தோழர் பத்மநாபாவின் 26ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்றையதினம்(19) அனுஸ்டிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு நேற்றையதினம் யாழ்ப்பாணம் சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள பனை தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்க சமாசத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தோழர் பத்மநாபா EPRLF தொழில்சங்க அணியின் தலைவர் இராசலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு அதிதிகளின் மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் ஈழமக்கள் ஜனநாயககட்சி சார்பாக கலந்துகொண்ட முக்கியஸ்தர்கள் தோழர் பத்மநாபாவின் நினைவுகளை நினைவுகூர்ந்து உரையாற்றினர்.
இதன்போது – 80களின் ஆரம்பத்தில் ரஞ்சன் தோழர் என்று தொலைதூரக் கிராமங்கள் பலவற்றில் அறியப்பட்ட நாபா உண்ண உணவின்றி மக்களின் விடுதலைக்காக உழைத்திருப்பதை அந்தக் கிராமத்து மக்களே சாட்சியாகச் சொல்வார்கள் என்றும் அமைதி நிறைந்த தோற்றம் கொண்ட நாபா அதிகமாகப் பேசுவதில்லை எனவும் தனது அருகிலுள்ள அனைவரின் மீதும் அன்போடு நடந்துகொள்வார் என்றும் இலங்கையில் உருவான தேசிய விடுதலை இயக்கங்களுள் முதல் முதலாக கிராம மட்டங்களில் வெகுசன அமைப்புக்களை உருவாக்கிக்கொண்ட அமைப்பை வழிநடத்தியவர் என்றும் தெரிவித்ததுடன் லண்டனில் மேற்படிப்பிற்காக சென்ற நாபா விடுதலை இயக்கத்தில் இணைந்துகொள்வதற்காகவே இலங்கைக்கு திரும்பவும் வந்திருந்தார் எனவும் அவரது நினைவுகளை மீட்டி உரையாற்றினர்.
இந்நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







Related posts:
|
|
|


