தாஜுதீன் மரண பரிசோதனைக்கு அதிக காலம் தேவை – சட்ட மா அதிபர் திணைக்களம்!
Saturday, April 1st, 2017
ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் மரணம் தொடர்பிலான விசாரணை சிக்கலானது எனவும், இதனை நிறைவு செய்வதற்கு நியாயமான கால அவகாசம் தேவை எனவும் சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பிலான வழக்கு, இன்று கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் ஜெயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வரும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவுக்கு பிணை வழங்குமாறு அவரது சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரியுள்ளார். இதற்குப் பதிலளிக்கையில், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க இதனை நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தாஜுதீனின் சடலத்தின் முக்கிய பகுதிகள் காணாமல் போயுள்ளதாகவும் இதனால் இது தொடர்பான விசாரணைக்கு கால அவகாசம் தேவை எனவும் டிலான் ரத்னாயக்க மேலும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை மீண்டும் ஏப்றல் மாதம் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்றும் உத்தரவிட்டுள்ளது
Related posts:
|
|
|


