குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையாளர் பதில்!

Tuesday, September 19th, 2017

தொகுதிவாரி அடிப்படையில் பொதுத்தேர்தலை நடத்த இன்னும் தேர்தல் சட்டத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறை சம்பந்தமாக தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடும் அதன் தலைவரின் சுயாதீனத்தில் பிரச்சினை இருப்பதாக அமைச்சர் டிலான் பெரேரா ஹாலி-எல பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் குற்றம் சுமத்தியிருந்தார்.

நாடாளுமன்றத்தில் நாங்கள் 19 வது திருத்தச்சட்டத்திற்கு கையை உயர்த்திய வேளையில், 20 வது திருத்தச்சட்டத்தின் ஊடாக தேர்தல் முறையில் மாற்றங்களை செய்தே அடுத்த பொதுத் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபா சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரான எமக்கு வாக்குறுதியளித்தார்.

ஆனால் தேர்தல் ஆணையாளர் விருப்பு வாக்கு முறையை விரும்புகிறார் போல் தெரிகிறது. அவர் சிறந்த தேர்தல் ஆணையாளர். தற்போது அவர் அரசசார்பற்ற நிறுவனத்தினரின் அணியில் இருக்கின்றார் என டிலான் பெரேரா குறிப்பிட்டிருந்தார்.டிலான் பெரேராவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அரசியல்வாதிகளுக்கு அவர்களின் கருத்துக்களை வெளியிட முழுமையான சுதந்திரம் உள்ளது.

அரசியல்வாதிகளுக்கு மாத்திரமல்ல சகல பிரஜைகளுக்கு கொள்கைகளை கொண்டிருக்கவும் கருத்துக்களை கூறவும் சுதந்திரம் உள்ளது.ஜனநாயகத்தை மதிப்பவர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் அதற்காக குரல் கொடுப்போம். ஆனால், அந்த கருத்துக்களுக்கு நாங்கள் இணங்க வேண்டியது எந்த வகையிலும் அவசியமில்லை.மேலும், அவர் மாத்திரமல்ல அனைத்து கட்சிகளும் என் மீது குற்றம் சுமத்துகின்றன. சில நேரம் பாராட்டுகளும் வரும். குற்றச்சாட்டு மற்றும் பாராட்டு இவை இரண்டுக்கும் நான் பதிலளிக்க மாட்டேன். வரலாறு எம்மை நிரபராதியாக மாற்றும் என மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

Related posts: