எத்தகைய தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகுங்கள் – கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாகிகள் செயற்பாட்டாளர்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Monday, January 21st, 2019

சக தமிழ் கட்சித் தலைமைகள் விரும்பியோ விரும்பாமலோ நாம் முன்னெடுத்துச் செல்லும் வழிமுறையூடான நிலைப்பாட்டையே முன்னெடுத்து வருகின்றனர். ஆனாலும் அந்த நிலைப்பாட்டில் கூட அவர்கள் உண்மையானவர்களாக இல்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகிகள், செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில் –

கடந்த காலங்களில் நாம் ஜதார்த்தமான முறைகளில் தூரநோக்குடன் கூடிய வழிமுறைகளில் சிந்தித்து ஒரு உறுதிமிக்க அரசியல் தீர்வுடன் எமது மக்களை அழிவுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் அந்த நடைமுறை சாத்தியமான வழிமுறையே நிரந்தர தீர்வையும் எமது இனத்திற்கு பெற்றுத்தரும் என்றும் வலியுறுத்திவந்திருந்தோம். ஆனாலும் எமது அந்த வழிமுறைகளை எல்லாம் தத்தமது சுயநலங்களுக்காக ஏழனம் செய்து  நிராகரித்த சக தமிழ் அரசியல் தரப்பினர் இன்று நாம் முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைதான் சரியானதென ஏற்றுக்கொண்டுள்ளனர். அதை மேடைகளிலும் வெளிப்படையாக கூறத் தொடங்கியுள்ளனர்.

இது வரவேற்கத்தக்க ஆரோக்கியமான விடயமாக இருந்தாலும் அந்த வழிமுறையைக்கூட அவர்கள் தமது சுயநலன்களுக்காக உண்மைத்தன்மையற்ற போக்குடனேயே வெளிப்படுத்தி வருகின்றனர்.

எமது பொறிமுறை ஊடாகவே  எமது இனம் எதிர்கொள்ளும் அரசியல் மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த செயற்திட்டங்களை செயற்படுத்த முடியுமென நாம் கடந்த காலங்களில் செயற்படுத்திக் காட்டியுள்ளோம். ஆனாலும் அவற்றை வெற்றிகரமாக மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு எமக்கு மக்களின் ஆணையும் அரசியல் பலமும் இன்றியமையாததாகின்றது.

இந்த ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாகவே காணப்படுகின்றது. அந்தவகையில் எந்தத் தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள நாம் தயாராகவேண்டும். எமது கட்சியின் செயற்பாடுகள் யாவும் மக்கள் மயப்பட்டதாகவே இருந்துவருகிறது. நாம் எமது செயற்பாடுகளை கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்கள் தோறும் வட்டார ரீதியாக கட்டமைத்து முன்னெடுத்து வந்திருக்கின்றோம்.

ஆனாலும் இந்த நிர்வாக கட்டமைப்புகள் மேலும் வலுப்படுத்தப்பட்டு எமது கட்சியின் கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் வென்றெடுக்கும் வகையில் கட்சித் தோழர்களும் முக்கியஸ்தர்களும் அர்ப்பணிப்புடனும் உழைக்க வேண்டியது அவசியமானது. அந்தவகையில் இந்த வட்டாரக் கட்டமைப்பை நாம் மேலும் வலுப்படுத்தி மக்கள் மத்தியில் எமது கருத்துக்களையும் மக்களுக்கான எமது பணிகளையும் விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகின்றது.  அந்தவகையில் அதற்கான திட்டங்களை பிரதேசங்கள் தோறும் முன்னெடுக்க நாம் முழுமையாக உழைக்க வேண்டும்.

எனவேதான் இந்த ஆண்டில் எம்மை நோக்கி எந்தவகையான தேர்தல் வந்தாலும்  அதற்கு முகங்கொடுக்கும் வகையில் நாம் புதிய வேகத்துடனும் நம்பிக்கையுடனும் எமது கட்சியின் கொள்கை மற்றும் இலட்சியக் கனவை ஈடேற்றும் வகையிலும் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்கவேண்டியது அவசியமானது  என அவர் மேலும் தெரிவித்தார்.


இருண்டு கிடக்கும் தொழிலாள ர்களின்  வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் -  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெ...
அரசியல் தீர்வும், அபிவிருத்தியும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவான...
தனக்கென ஒரு அரசியல் சித்தாந்தம் கொண்ட டக்ளஸ் - சட்டத்துறை வல்லுநர் பேராசிரியர் கண்ணமுத்து சிதம்பரநாத...
தலைமுறைகளுக்கு சொத்துச் சேர்க்கும் அக்கறை தமிழ் மக்கள் மீது இல்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெர...
வவுனியா மாவட்டத்தின் சமூகப் பிரமுகர்கள் - டக்ளஸ் எம்.பி. இடையே விசேட சந்திப்பு!