வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த சகல நடவடிக்கைகளையும் எடுங்கள் – ஜனாதிபதி பணிப்பு!

Tuesday, May 29th, 2018

தென்பகுதியில் தற்போது பரவிவரும் வைரஸ் நோயை கட்டுப்படுத்த சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று (28-05-2018) சுகாதார அமைச்சுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி சுகாதார அதிகாரிகளுடன் இந்த வைரஸ் நோய் பரவுவதை தடுப்பதற்கும் இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான செயற்திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடினார்.

நிதி ஒதுக்கீடுகளைத் தடையாக கொள்ளாமல் தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும் தாதியர் உள்ளிட்ட தேவையான ஆளணியினரை உரிய வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்குமாறும்; அவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

சிகிச்சை நடவடிக்கைகளுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்கள் சம்பந்தமாக குறைபாடுகள் இருப்பின் அவசர தேவையாகக் கருதி அவற்றைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதற்கு அதற்கான ஆவணங்களை துரிதமாக தனக்கு வழங்கினால் அமைச்சரவை கூட்டத்தில் அதனை சமர்ப்பித்து தேவையான விடயங்களை முன்னெடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

மாகாண மருத்துவமனைகளில் சிகிச்சை நடவடிக்கைகளின் போது நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நிதி ஒதுக்கீடுகளை துரிதமாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் இந்த நோய் காரணமாக தென் மாகாண பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் காரணமாக அதற்கான தேவை ஏற்படவில்லை என மருத்துவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

தென் மாகாணத்தில் காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் ஏழு கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளின் தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையிலான ஆரம்ப வகுப்புக்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் மூடுவதற்;கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதேவேளை அந்த மாகாணத்தின் முன்பள்ளிகளுக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 04 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நோய் குறித்து வைத்தியர் சங்கத் தலைவர் டாக்டர் ஜனித் லியனகே தெரிவிக்கையில்,

இந்த நோய் நாடு முழுவதும் பரவினால் இதனை தடுப்பதற்காக தீவிர சிகிச்சை பயிற்சி பெற்ற, நிபுணத்துவ டாக்டர்களின் பற்றாக்குறை, உபகரணங்கள் பற்றாக்குறை, சிறுவர்களுக்கான தீவிர சிகிச்சை பிரிவுகளில் இடப்பற்றாக்குறை போன்றவற்றால் நிலைமை மேலும் மோசமடையலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சிறுவர்களுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு நான்கு மட்டுமே உண்டு. வைத்தியசாலையில்; மட்டும் அதிதீவிர சிகிச்சை பிரிவில் ஏழு கட்டில்களே உள்ளன. மேல் மாடியில் மேலும் கட்டில்களைப் போட்டு விரிவுபடுத்தலாம். கராப்பிட்டியில் இரு வைத்திய நிபுணர்களே உள்ளனர். நாடு முழுவதும் பத்து நிபுணர்களே உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது சம்பந்தமாக அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இன்புளுவென்ஸாவினால் பீடிக்கப்பட்ட குழந்தைகள் நிரம்பி உள்ளதாகவும் டாக்டர் தெரிவித்துள்ளார்.

இதனால் புற்றுநோய், சிறுநீரக, இருதய நோயாளர்களை இப்பிரிவில் சேர்க்க முடியாதுள்ளது.

நிலைமை இவ்வாறிருக்க தென்மாகாணத்தில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் எலி காய்ச்சல் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெள்ளநீரில் நடக்கும் போது பாதணிகளை அணிந்தே செல்ல வேண்டுமென சுகாதார பரிசோதகர்களின் செயலாளர் மகேந்திரபாலசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தென்மாகாண கல்வியமைச்சர் சந்திமாரசபுத்ரா தெரிவிக்கையில் பிள்ளைகள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தால் அல்லது காய்ச்சல் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டால், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளார்.

Related posts: