வானிலை அறிவித்தல்களை தமிழில் வெளியிடுவதற்கு திணைக்களத்தில் தமிழ் அதிகாரிகளுக்குப் பற்றாக்குறை!

Saturday, December 2nd, 2017

வளிமண்டலவியல் திணைக்களத்தில் தமிழ்மொழி தெரிந்த அதிகாரிகளின் பற்றாக்குறையால் வானிலை முன்னறிவித்தல்கள் மற்றும் இயற்கை இடர்கள் குறித்து முன்னெச்சரிக்கைகளை தமிழ்மொழியில் வெளியிடமுடியாதுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமலால் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள இடர்நிலைமைகள் குறித்து முன்னறிவித்தல்கள் சிங்களம் மற்றும் ஆங்கிலமொழிகளில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்றது. இந்த அறிவித்தல்கள் தமிழ் மொழியில் வெளியிடப்படாமையினால் தமிழ் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் சிங்களம் மற்றும் ஆங்கிலமொழி பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்திற்குள் வானிலை முன்னெச்சரிக்கைகள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டபோதும் தமிழ்மொழி மூலம் இறுதியாக கடந்த 21 ஆம் திகதியே முன்னறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தற்போதைய இடர் நிலமைகள் தொடர்பாக தமிழ் பேசும் மற்றும் வேறுமொழி தெரியாதவர்களுக்கு அது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களை அறிந்து கொள்வதில் சிக்கல் நிலமைகள் ஏற்பட்டுள்ளன என்பதை நாமும் ஏற்றுக்கொள்கின்றோம்.

வளிமண்டலவியல் திணைக்களத்துக்கு தமிழ் தெரிந்த அதிகாரிகள் 4 பேராவது இருக்கவேண்டும். ஆனால் குறிப்பிட்ட கடமைக்காக ஒருவர் கூட கிடையாது.

இதற்கான நியமனங்களை வழங்க வேண்டிய பொறுப்பு அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் பொறுப்பாகும். அவர்கள் நியமனங்களை வழங்கி ஊழியர்களைப் பெற்றுத்தந்தால் எங்களால் அதனைச் செய்யமுடியும். அதனை செய்யாது எங்களால் தமிழ்மொழியில் முன்னெச்சரிக்கைகளை விடுப்பது சிக்கலானதே.

இவ்வாறான நெருக்கடி நிலைமைகளில் மக்கள் உடனடியாக தெளிவு பெரும் வகையில் மூன்று மொழிகளிலும் அறிவித்தல்கள் விடுக்கப்படவேண்டும். இதனை அரசு கருத்தில் கொண்டு செயற்படவேண்டும் என்றார்.

Related posts: