வரி விதிப்பு மட்டும் மதுவை ஒழிக்க வழியாகாது – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, June 23rd, 2017

எமது நாட்டிலே மது பாவனையை ஒழிப்பது தொடர்பில் பல்வேறு முயற்சிகள் அரச மட்டத்திலும், தனியார் நிறுவன ரீதியாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், இன்றைய நிலையில் மது பாவனையில் தென் ஆசியாவில் முதலாவது இடத்திற்கு எமது நாடு வந்திருக்கின்றது. போதையற்ற நாடாக எமது நாட்டை மாற்றப் போவதாக கூறப்படுகின்ற போதிலும், 2017ஆம் ஆண்டுக்கான எமது வரவு – செலவுத் திட்டத்தில் கலால் வரி சேர்ப்பின் மூலமாக திறைசேரி சுமார் 575 பில்லியன் ரூபாவை எதிர்பார்க்கின்றது.

பல்வேறு வழிமுறைகளின் ஊடான வரி விதிப்புகளின் மூலமாக ஒரு போதும் மது பாவனையைக் கட்டப்படுத்த முடியாது என்பதை எமது நாடு இன்று தென் ஆசியாவில் முதலாவது இடத்திற்கு மது பாவனையில் முன்னேறியுள்ளதிலிருந்தே தெரிய வருகின்றது. அதீத வரி விதிப்புகள் என்பது மதுபான பானைக்கு உட்பட்டுள்ளவர்களது குடும்பங்களின் வறுமையை மேலும் அதிகரிப்பதற்கும், சட்டவிரோதமான மது உற்பத்திகள் அதிகரிப்பதற்குமே துணை போகின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் அறிவித்தல் தொடர்பாக கடந்த 22ஆந் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், எமது நாட்டிலே 65 வீதமான மது பானங்கள் சட்டவிரோதமானவை என்றே தெரிய வருகின்றது. அதே போன்று நாட்டில் சுமார் 4000 ஆயிரம் சட்டரீதியிலான மது விற்பனையாளர்கள் இருக்கின்ற நிலையில், சுமார் 200,000ற்கும் அதிகமான சட்டவிரோதமான மது விற்பனையாளர்கள் இருப்பதாக சுயாதீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை தொடர்பில் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அவ்வாறான சட்டவிரோதமான மது விற்பனைகள், உற்பத்திகள் என்பன தடை செய்யப்பட வேண்டும்.

எனவே, இவ்வாறான நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, வரி விதிப்புகள் மட்டுமே நோக்கம் என்ற வகையில் செயற்படாமலும், வரி விதிப்பே மது பானத்தை ஒழிக்கும் ஒரே வழி என தொடர்ந்தும் நடைமுறைச் சாத்தியமற்ற கதைகளைக் கூறிக் கொண்டிருக்காமலும், அதன் மூலமாக சட்டவிரோத மது உற்பத்திகளை மேலும் அபிவிருத்தி செய்யாமலும், நான் மேலே கூறியதைப் போன்று இயற்iகான மென் மது பானங்களின் உற்பத்திகளை குறுகிய காலத்திற்கு ஊக்குவிப்பதன் ஊடாக படிப்படியாக அழிவுகள் கூடிய வன் மதுபான பாவைனைகளிலிருந்து எமது மக்களை மீட்பதற்கும், அதனூடாக படிப்படியாக மது பாவனையிலிருந்து எமது மக்களை முற்றுமுழுதாக விடுவிப்பதற்கும்  நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகள் குறித்து ஆராயுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று குறிப்பிட்டேன்.

Related posts: