யாழ் மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் அதிகரிப்பு: எதிராக நீதிமன்ற நடவடிக்கை!

யாழ் மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து குடும்பம் நடத்தும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைத் தடுக்க பதின்ம வயது தம்பதியர் அனைவருக்கும் எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என யாழ்ப்பாண மாவட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.
இதன்போது பிரதேச செயலக ரீதியாக சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புத் தொடர்பில் கூட்டத்தில் பங்கேற்ற தரப்பினரால் எடுத்துரைக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளும் 18 வயதுக்குட்பட்ட ஆண் பிள்ளைகளும் இணைந்து வாழ்கின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கு சட்டத்தில் இடமில்லை. அத்துடன், பல்வேறு குடும்ப வன்முறைகளுக்கும் இந்தச் செயற்பாடு வழிவகுக்கின்றது என்று கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
யாழ். மாவட்டத்திலுள்ள பிரதேச செயலர் பிரிவுகள் அனைத்திலும் பதின்ம வயதுத் திருமணங்கள் மற்றும் இணைந்து வாழ்கின்ற சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் உள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து வாழ்கின்றவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். இருவரது பெற்றோர் இணக்கமாகச் சென்றாலும் குற்றமிழைத்த பதின்ம வயதினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பொலிஸார் உறுதியளித்தனர்.
இதன்போது யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக பிரிவுகளையும் சேர்ந்த சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள், சிறுவர் நன்நடத்தை அலுவலர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பேரிருந்தமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|