முன்பள்ளி ஆசிரியர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்!
Saturday, May 19th, 2018
வடக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி சபைகளின் கீழ் உள்ள முன்பள்ளிகளுக்கு ஆளணி நிரப்பப்படும் போது ஏற்படும் முன்பள்ளி ஆசிரியர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு முன்பள்ளிகளை நடத்தும் நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது சரியானதாக அமையும் என்று மாகாண கல்வித் திணைக்களத்தின் முன்பள்ளி பிரிவு தெரிவித்துள்ளது.
இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது;
உள்ளூராட்சிசபைகளின் கீழ் உள்ள முன்பள்ளிகளில் 47 ஆசிரியர்களை உள்வாங்குவதற்கான அனுமதிக்கப்பட்ட ஆளணி உள்ளது.
இதனை நிரப்புவதற்காக பரீட்சை அண்மையில் நடத்தப்பட்டது. ஜி.சி.ஈ சாதாரண பரீட்சையில் சித்தி மற்றும் ஒரு வருட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமாவை முழுமை செய்தல் போன்ற தகுதிகளை உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
ஓய்வூதியம் மற்றும் நிரந்தர சம்பள அளவுத் திட்டம் போன்றவை இந்த ஆசிரியர்களுக்கு கிடைக்கும். இதனால் தற்போது முன்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களும் இதற்கு விண்ணப்பித்துள்ளனர். பரீட்சைப்பெறுபேறின் அடிப்படையில் இவர்கள் உள்ளூராட்சிசபைகளின் கீழ் உள்ள முன்பள்ளிகளுக்கு உள்வாங்கப்பட்டால் முன்னர் அவர்கள் கற்பித்த முன்பள்ளிகளில் ஆசிரியர் வெற்றிடம் ஏற்படும்.
ஆகவே அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு முன்பள்ளிகளை நடத்தும் நிர்வாகம் முன்வரவேண்டும். ஒரு வருட முன்பள்ளி டிப்ளோமாவை நிறைவு செய்த தகுதியானவர்களை இதற்கு உள்வாங்குவது சிறப்பாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
|
|
|


