மின் கட்டமைப்பு விரைவில் “ஸ்மாட் மீற்றர்” முறையில்  –  அமைச்சர் அஜித் பெரேரா!

Thursday, December 7th, 2017

இலங்கையின் மின்சாரக் கட்டமைப்பு கூடிய விரைவில் ஸ்மாட் மீற்றர் முறைமைக்கு மாற்றம் காணும் என்று மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2018 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்ட மின்வலு புதுப்பிக்கத்தக்க சக்தி, பெற்றோலிய வளங்கள், கடற்றொழில் மற்றும் மீன்வள நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சுக்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு;

2050 ஆம் ஆண்டாகும் போது பெற்றோல்,டீசல் வாகனங்கள் இல்லாது போகும். புதுடில்லியில் இன்று எமது நாட்டு வீரர்கள் முகமூடி அணிந்துதான் விளையாடுகின்றனர். காரணம் அங்குள்ள வாகனங்களின் நச்சுப் புகையால் அனைத்தும் தூசு மண்டலங்களாக மாறியுள்ளன. சுத்தமான காற்றைச் சுவாசிக்க முடியாமல் உள்ளது. இந்த நிலைமை எமது நாட்டிலும் ஏற்படக்கூடாது.

சர்வதேச சூரிய ஒளிக் கட்டமைப்பு உள்ளது. இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் சர்வதேச சோலர் லைன் உள்ளது. எமது நாடும் சூரிய ஒளி மற்றும் காற்றை அடிப்படையாகக் கொண்ட மின்சார முறைமைக்கு மாறினால் இயற்கையைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

வருடாந்தம் மின்சார உற்பத்திக்காக டீசலுக்கு 110 பில்லியனும், நிலக்கரிக்கு 30 பில்லியனும் அரசால் செலவிடப்படுகிறது. சோலர் பவர் முறைக்கு மாறினால் அதிகளவான பணத்தைச் சேமிக்க முடியும். அத்துடன், விரைவில் மின்சாரக் கட்டமைப்பு மற்றும் நிர்வாக முறைகள் நவீன முறைக்கு மாற்றப்படும். அதன் அடிப்படையில், மின்சாரக் கட்டமைப்பு அனைத்தும் “ஸ்மாட் மீற்றர்” முறைமைக்கு மாற்றப்படும் – என்றார்.

Related posts: