மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்!

Thursday, May 9th, 2019

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை கல்வி அமைச்சினதும் உயர்கல்வி அமைச்சினதும் சட்டதிட்டங்களுக்கு அமைவாக தனியார் பல்கலைக்கழகமாக முன்னெடுத்து செல்வதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன், அங்கு முன்னெடுக்கப்படும் பாடநெறிகள் தொடர்பாக தெளிவான தீர்வுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டு கிழக்கு மாகாண அரச அதிகாரிகள் மற்றும் மாகாணத்தின் முஸ்லிம் இளைஞர் யுவதிகளை சந்தித்தபோதே ஜனாதிபதி இவற்றைத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமான நோக்கங்களுக்கு இலங்கையரிடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க கூடாது.

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் இலங்கையின் பிரச்சினை மட்டுமல்ல என்றும், அது சர்வதேசத்துடன் தொடர்புடைய பயங்கரவாதச் செயலாகும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த சர்வதேச பயங்கரவாத குழுவுக்கு எதிராக செயற்பட உலகின் பலம்வாய்ந்த நாடுகள் முன்வந்திருக்கும் நிலையில் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கும் நடவடிக்கைகளை பாதுகாப்பு தரப்பினர் தற்போது மிக வெற்றிகரமான முறையில் முன்னெடுத்திருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், நாட்டின் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கம் பாதிக்கப்படும் வகையிலான நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டு பயங்கரவாதத்திற்கு எந்த வகையிலும் துணைபோக வேண்டாம் என பொதுமக்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்துவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts: