பாடசாலைகளுக்கு ஒழுங்கற்ற வரவு: 16 மாணவர்கள் அடையாளம்!
Friday, May 18th, 2018
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் பாடசாலைகளுக்குச் செல்லாத அல்லது ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட 16 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு ஆறு சிறுவர்களை சிறுவர் இல்லங்களில் தங்க வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பாடசாலைகளுக்குச் செல்லாத அல்லது பாடசாலைகளுக்கு ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட மாணவர்களை மீளக்கற்றலில் இணைக்கும் செயற்பாடுகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தயோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கோயில்வயல், இயக்கச்சி, வண்ணாங்கேணி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் மேற்கொண்ட கள ஆய்வின் போது 16 சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லாது கிராமங்களில் இருப்பது அடையாளம் காணப்பட்டது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட பதினாறு சிறுவர்களில் பத்துப்பேர் பாடசாலைகள் வரவுகள் உறுதிப்படுத்தப்பட்டு அவர்களின் பெற்றோர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
ஏனைய ஆறு சிறுவர்களும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து ஆறு பேரையும் சிறுவர் இல்லங்களில் தங்க வைக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டது.
இதேவேளை கடந்த வாரம் பூநகரிப் பிரதேசத்திலும் பன்னிரெண்டு சிறுவர்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டு நான்கு சிறுவர்கள் நீதிமன்றக் கட்டளைக்கு அமைவாக சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


