பசும்பாலைப் பெற்றுக்கொண்டு பால்மாப் பைக்கற்றுகள் திணிப்பு – கால்நடை வளர்ப்போர் சீற்றம்!

Tuesday, August 14th, 2018

முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பாக கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்புப் பிரதேசங்களில் இருந்து நாள்தோறும் பத்தாயிரம் லீற்றருக்கும் அதிகமான பசும்பாலைச் தென்பகுதியைச் சேர்ந்த பால்மா உற்பத்தி நிறுவனம், மாவட்டக் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம் ஊடாகப் பசும்பாலை கொள்வனவு செய்து வருகின்றது.

நாளாந்தம் பல ஆயிரக்கணக்கான லீற்றர் பால் தென் பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகின்றது. இந்தப் பாலை வைத்து யோக்கட், நெய், ஐஸ்கிறீம், உள்ளிட்ட உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு அதிகளவில் ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகின்றது.

ஆயிரக்கணக்கான கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளில் இருந்து பாலை மில்கோ பால்சேகரிப்பு நிலையங்களில் கொண்டு சென்று விற்பனை செய்கிறார்கள். இவர்களிடம் இருந்தே தென்பகுதி நிறுவனம் பாலைக்கொள்வனவு செய்து வருகின்றது.

பண்ணையாளர்களுக்குப் பணம் வழங்கப்படும் நாள்களில் தென்பகுதி நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பால்மாப் பெட்டிகளைக் கொடுக்குமாறு பால் சேகரிப்பு நிலையங்களுக்குக் கூறப்பட்டது.

பத்து நாள்களுக்கு ஒரு தடவை கால்நடை வளர்ப்போருக்கு பாலுக்கான பணம் செலுத்தப்பட்டு வந்தாலும் ஐந்தாயிரம் ரூபாவுக்குக் குறைவான பெறுமதியான பாலைக் கொடுப்பவர்களுக்கு ஒரு பால்மா பைக்கற்றையும் ஐந்தாயிரம் ரூபாவுக்கு மேல் பாலைக் கொடுப்பவர்களுக்கு இரண்டுக்கு மேற்பட்ட பால்மா பைக்கற்றுகளையும் கொடுத்து அவர்களின் பால் பெறுமதிக்கு கொடுக்கும் பணத்தில் இருந்து அதனைக் கழித்து வருகின்றார்கள்.

இது ஒரு திட்டமிட்ட செயல். இந்தப் பாலை கொள்வனவு செய்யும் நிறுவனம் அவர்களின் தயாரிப்புப் பால்மா பைக்கற்றுகளை கால்நடை வளர்ப்போருக்குக் கட்டாயப்படுத்தி கொடுத்து அதனைச் சந்தைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, இச் செயற்பாடு தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினருக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் உண்மையில் மக்களுக்குப் பயன்படாத செயற்பாட்டைச் செய்வது தவறான விடயம் என்றும் அதற்கான நடவடிக்கையை பேசி தீர்மானம் எடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதனைவிட மில்கோ பால் கொள்வனவு நிலையத்தின் அதிகாரி கூறுகையில்: தம்மால் பண்ணையாளர்களுக்கு கட்டாயப்படுத்தி பால்மா பைக்கற்றுகள் வழங்கப்படவில்லை என்றும் 300 பால்மா பைக்கற்றுகள் அவ்வாறான விளம்பர விநியோகத்துக்கு தம்மிடம் வந்ததாகவும் அவற்றை விநியோகிக்கவே பண்ணையாளர்களுக்கு வழங்குவதாகவும் குறிப்பிட்டதோடு இந்தச் செயற்பாடு தொடர்பில் தான் மேலதிகாரிக்குத் தெரியப்படுத்தி நடவடிக்கைக்கு உட்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

Related posts:


இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை – தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன யாழ்ப்பாணத்...
உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு...
நாட்டில் சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் நிலை உச்சத்தை அடைந்துள்ளது - ரிஜ்வே வைத்தியசாலையின் ...