நுழைவுச் சீட்டுக்களை உடனடியாக ஒப்படைக்கவும் : பரீட்சைகள் ஆணையாளர்

Wednesday, July 12th, 2017

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நுழைவுச் சீட்டுக்களை மாணவர்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.ஜே.எம்.என். புஸ்பகுமார அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

உயர்தரப் பரீட்சைக்கான நுழைவுச்சீட்டுக்கள் கிடைக்கப் பெற்ற உடன் அவை மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

நுழைவுச்சீட்டுக்களில் ஏதேனும் பிழைகள் காணப்பட்டால் அது குறித்து எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னதாக திருத்தங்களை செய்து கொள்ள முடியும் என அவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். 237443 பாடசாலை பரீட்சார்த்திகளின் நுழைவுச்சீட்டுக்கள் கடந்த 7ஆம் திகதியும் 77284 தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் நுழைவுச்சீட்டுக்கள் நேற்றைய தினமும் தபால் செய்யப்பட்டுள்ளது.

பாடசாலை பரீட்சார்த்திகளுக்கு நுழைவுச்சீட்டுக்கள் உரிய நேரத்தில் கிடைக்கப் பெறாத காரணத்தினால் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பினையும் பாடசாலை அதிபர்கள் ஏற்றுக்கொள்ள நேரிடும் என பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.

Related posts: