நாட்டில் புதிதாக 33 பிரதேச செயலகப் பிரிவுகள் உருவாகும்!

நாட்டில் தற்போது 332 பிரதேச செயலகப் பிரிவுகளை 2020 ஆம் ஆண்டாகும் போது 365 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கண்டி பூஜாபிட்டிய பிரதேச செயலகத்திற்கான காரியாலயம் 138 இலட்சம் ரூபா செலவில் புதியதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அதன்பின் இடம்பெற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் அவர் தெரிவிக்கையில்:
நாட்டில் பிரதேச செயலக காரியாலயங்கள் 332 தற்போது இயங்கி வருகின்றன.
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டாகும் போது இவற்றை 365 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேநேரம் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது ஐந்து பிரதேச செயலக காரியாலயங்கள் இயங்கி வருகின்றன.
இவை இன்னும் ஐந்தை உள்ளடக்கி மொத்தம் பத்தாக உயர்த்தப்படவுள்ளன. காலி மாவட்டத்தில் 19 பிரதேச செயலகங்கள் தற்போதுள்ளன. இவை 22 ஆக உயர்த்தப்படவுள்ளன.
இதேபோல் கண்டி மாவட்டத்தில் மேலும் இரு பிரதேச செயலக காரியாலயங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு உட்பட நாட்டில் மேலும் சில மாவட்டங்களிலும் புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்படவுள்ளன. இதன் மூலம் மக்கள் சேவைகளை துரிதமாகச் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டிலுள்ள அனைத்துப் பிரதேச செயலகங்களுக்கும் புதிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
தற்போது 180 பிரதேச செயலக காரியாலயங்களுக்காக புதிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
மீதமாக உள்ள பிரதேச செயலக காரியாலயங்களுக்கும் புதிய கட்டடங்களை 2020 ஆம் ஆண்டு ஆகும் போது நிர்மாணிக்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்க உள்ள 33 பிரதேச பிரிவுகளுக்குமான புதிய கட்டடங்களும் 2020 இல் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Related posts:
|
|