நீண்டகாலமாக சிறையிலிருக்கும் புலிச் சந்தேகநபர்களை விடுதலை செய்யவேண்டும் – ஜனாதிபதியிடம் ஞானசார தேரர் கோரிக்கை!

Friday, February 4th, 2022

நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் புலிச் சந்தேக நபர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு கலகொட அத்தே ஞானசார தேரர், ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 12 ஆண்டுகள் கடந்துள்ளதால், கடந்த கால காயங்களை குணப்படுத்த புலிச் சந்தேக நபர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் – நான் சிறையில் இருக்கும் போது, புலிகளுடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பலர் என்னை சந்தித்தனர்.

அவர்கள் என்னை தேடி வந்து அவர்களின் வாழ்க்கை கதைகளை கூறினர். அவர்களுக்கு நடந்தது என்ன, ஏன் இந்த நிலைமைக்கு ஆளாகினர் போன்ற விடயங்களை கூறினர்.

போர் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. காயங்களை மேலும் காயப்படுத்திக்கொண்டிருக்காது, புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்வது முக்கியமானது என ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினரிடம் எடுத்துரைத்தோம்.

இல்லை என்றால், இதனை அடிப்படையாகவும் ஒரு காரணமாகவும் கொண்டு, மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ் பிரிவினைவாத சக்திகள் ஒருங்கிணைப்புகளை மேற்கொள்வார்கள்.

ஒரு நாடு – ஒரு சட்டம் ஜனாதிபதி செயலணிக்குழு என்ற வகையில் நாங்கள் வடபகுதிக்கு விஜயம் செய்தோம். குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் சிறையில் இருக்கும் பலரது பெற்றோர் எம்மை சந்தித்தனர்.

சிறையில் இருப்போரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே இவர்களில் கோரிக்கையாக இருந்தது. கடந்த 25 ஆம் திகதி ஒரு கலந்துரையாடல் நடந்தது, அப்போது நாங்கள் ஜனாதிபதிக்கு இதனை நினைவூட்டினோம்.

இந்த கைதிகள் விடுதலை செய்யப்படுவது முக்கியமானது என்பதை சுட்டிக்காட்டினோம். இதனை செய்தால், பிரிவினைவாத கரு நிழல் மீண்டும் ஒருங்கிணைய இருக்கும் சந்தர்ப்பை இல்லாமல் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: