தேர்தல் தாமதிக்கப்பட்டால் சிம்பாப்வேயில் நடந்ததே இங்கு நடக்கும் – நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க

Tuesday, November 28th, 2017

நாட்டில் தொடர்ந்தும் தேர்தல் நடத்தாது காலம் தாழ்த்தப்படுமாகவிருந்தால் சிம்பாப்வேயில் இடம்பெற்றதைப் போன்ற அரசியல் நிலவரம் இலங்கையிலும் ஏற்படும் என்று மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

அரசு மக்கள் தீர்ப்புக்கு அச்சமடைந்துள்ளது. பல்வேறு காரணங்களை முன்வைத்து தொடர்ந்தும் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்தி வருகிறது. தேர்தலை நடத்தாது பொது வாக்கெடுப்பிற்குச் செல்லுமாறு பன்னாட்டுச் சமூகத்தினர் அரசுக்கு ஆலோசனை வழங்கியிருக்கலாம்.

பொது வாக்கெடுப்பிற்குச் செல்வதும் தற்போது அரசுக்குப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அரசமைப்புத் தொடர்பில் அரசு பொது வாக்கெடுப்பிற்குச் செல்லுமாகவிருந்தால் இங்கிலாந்தில் நடைபெற்றதைப் போன்ற நிலமை இலங்கையிலும் ஏற்படும். அரசு பொது வாக்கெடுப்பிற்கும் செல்லாது தேர்தலையும் நடத்தாது தொடர்ந்தும் இவ்வாறு இழுத்தடிப்பு செய்துகொண்டு சென்றால் சிம்பாப்வேயில் இடம்பெற்றுள்ளதைப் போன்ற அரசியல் நிலவரத்தை நல்லாட்சி அரசும் எதிர்கொள்ள வேண்டிவரும் – என்றார்.

Related posts: