தெருநாய்கள் பிடித்தல் தொடர்பில் எந்த நடவடிக்கையும் இல்லை!

Sunday, November 26th, 2017

யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்துக் காணப்படும் தெருநாய்களால் அதிகளவில் வீதிவிபத்துக்கள் ஏற்படுவதோடு நாய்க்கடிக்கும் மக்கள் இலக்காகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு உடனடியாக தெருநாய்களைப் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என கடந்த மே மாதம் 13 ஆம் திகதி வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்ட போதிலும் இன்று வரை தீர்வு வழங்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு உட்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடந்த மே மாதம் 13 ஆம் திகதி வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இடம்பெற்றது. இதன் போதே மேற்படி விடயம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

தெருநாய்களை கடந்தகால உள்ளூராட்சி மன்றங்கள் பிடித்தன. இருப்பினும் நாய்களைக் கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக மீண்டும் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது.

இவற்றினைக் கருத்தில் கொண்டு நாய்களை உடனே பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டது. இது தொடர்பில் ஆராய்ந்த வேளையில் மகிந்த சிந்தனையின் பிரகாரம் நாய்களைப் பிடிப்பது தடுக்கப்பட்டது எனக் கூறப்பட்டது.

எனினும் அது சட்டப் பிரகாரம் தடை செய்யப்பட்ட ஓர் விடயம் அல்ல என்பது சுட்டிக்காட்டப்பட்டது. எனவே இது தொடர்பில் மேலும் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இருப்பினும் மாகாண உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சர் இது தொடர்பில் பதிலளிக்காத காரணத்தினால் நாய்களைப் பிடிப்பது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட முடியவில்லை எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

Related posts:

வருமானத்தை விட செலவுகளே அதிகமாகியுள்ளன – மீள்வதற்கு பொறுப்புள்ள சகலரும், ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ...
சலுகை அடிப்படையில் இலங்கையின் எரிபொருள் தேவையை நிறைவு செய்ய ஐக்கிய அரபு இராச்சியத்துடன் அமைச்சர் பீர...
எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறைசார் அதிகாரிகளுக்கு அதிரடி உத்த...