தாய், சேய் மரணம் தொடர்பில் சந்தேகம்: கணவன் முறைப்பாடு  !

Saturday, November 18th, 2017

யாழ். போதனா வைத்தியசாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட தாயும் குழந்தையும் இறந்தமை தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் அச்சுவேலியைச் சேர்ந்த இறந்துபோன 25 வயதான பிரசாந்தினியின் கணவன் குருபரன் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் இரத்த புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த இந்தத் தாய் கடுமையான இரத்த போக்கினாலேயே மரணமடைந்தார் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கூறியுள்ளார்.

தனது முறைப்பாடு குறித்து பெண்ணின் கணவர் குருபரன் கூறும்போது,

இரண்டாவது பிரசவத்திற்காக கடந்த 12 ஆம் திகதி எனது மனைவியை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தேன். 13 ஆம் திகதி பிரசவம் நடந்தது. தாயும் குழந்தையும் நலமாகவே காணப்பட்டனர். எனது மனைவி நன்றாகச் சாப்பிட்டார். ஆரோக்கியமாக என்னுடன் கதைத்துப் பேசினார். பின்னர் குழந்தையும் தாயும் ஒருவர் பின் ஒருவராக இறந்து போனார்கள். அவர்களின் இறப்பு சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

எனவே தான் இந்த மரணம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும், வைத்தியசாலைப் பணிப்பாளரிடமும் முறைப்பாடுகள் செய்துள்ளேன் என்றார். இது தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் கேட்டபோது, கடந்த 12 ஆம் திகதி குறித்த தாய் பிரசவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சேர்க்கப்பட்டதன் பின்னர் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர் 24 முதல் 28 வாரங்களையே கடந்திருந்தார். அதாவது 6 முதல் 7 மாதக் குழந்தையையே வயிற்றில் சுமந்திருந்தார். எனினும் பிரசவத்திற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் காணப்பட்டன. இந்நிலையில் தாயின் இரத்த மாதிரி பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. அதன்போது தாய்க்கு இரத்தப் புற்றுநோய் காணப்பட்டமை கண்டறியப்பட்டது. அதனை அவரது கணவருக்கு தெரியப்படுத்தினோம் என்றார்.

இதனால் இரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்பட்டது. எனினும் அவர் குழந்தையை பிரசவித்தார். குறை மாதக் குழந்தை என்பதால் நிறை ஒரு கிலோவுக்கு குறைவாகவே காணப்பட்டது.

புpரசவத்தின் பின்னர் தாய்க்கு இரத்தப்போக்கு தொடர்ந்து காணப்பட்டது. இரத்தத்தை உறைய வைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இரத்தமும் தொடர்ச்சியாக ஏற்றப்பட்டிருந்தது.

எனினும் இரத்தப் போக்கை நிறுத்த முடியவில்லை. இரத்தத்தில் வைரஸின் தாக்கம் அதிகரித்ததால் அவர் உயிரிழந்தார். குழந்தையும் குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது எனவும் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

Related posts:

தாக்குதலுடன் தொடர்புடைய எவரும் சட்டத்திவிருந்து தப்பிக்க முடியாது – உயிர்த்த ஞாயிறு வாழ்த்துச் செய்த...
சீனாவுடனான நட்புறவுகளை உறுதியாக நிலைநிறுத்த இலங்கை விரும்புகிறது - சீன வெளிவிவகார அமைச்சரிடம் வெளிவி...
யாழ்ப்பாணம் - கொழும்பிற்கிடையில் மேலும் 33 பஸ்கள் சேவையில் - வடமாகாண வீதி போக்குவரத்து அதிகார சபை தெ...