ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள சீ 350 ஆவணம் அடுத்த வாரம் வெளியிடப்படும் – சட்டமா அதிபர் திணைக்களம்!

Monday, June 4th, 2018

பிணை முறிகள் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள சீ 350 ஆவணம் அடுத்த வாரம் வெளியிடப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆவணத்தை பகிரங்கப்படுத்தினால் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது தொடர்பில் ஆராயப்படுவதாகவும் அதற்காக விசேட குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த குழுவின் இறுதி முடிவை ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆவணத்தைப் பகிரங்கப்படுத்துவது தொடர்பில், சபாநாயகர் கரு ஜயசூரிய தம்மிடம் வினவியதாகவும் சட்டமாஅதிபர் கூறினார்.

எவ்வாறாயினும், முறிகள் ஆணைக்குழுவின் இறுதியறிக்கையின் இரண்டாவது இணைப்பின் முதற்பிரதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலுள்ளதாக தேசிய சுவடிகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் செயலாளருக்கு கோட்டை நீதவான் பிறப்பித்த உத்தரவிற்கமையவே இந்த ஆவணம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: