சுமந்திரனுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் சவால்!

Saturday, July 1st, 2017
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் சுமந்திரன் முடிந்தால் தனது பதவியை இராஜினாமாச் செய்து விட்டு மாகாண சபைத் தேர்தலிலேயோ அல்லது  வேறு தேர்தல்களிலோயோ போட்டியிட்டு வெற்றி கொள்ளட்டும் பார்க்கலாம்….எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன். பகிரங்கச் சவால் விடுத்துள்ளார்.
மாகாண சபையைக் கலைத்துவிட்டுத் தேர்தலை நடாத்திப் பார்க்கட்டும்….என வடமாகாண முதலமைச்சருக்குப் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் அண்மையில் பகிரங்கச் சவாலொன்றை விடுத்திருந்த நிலையில் சுமந்திரனின் கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வடமாகாண முதலமைச்சர் தனது பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும்…. வடமாகாண சபையைக் கலைத்து விட்டு அடுத்த தேர்தல் நடாத்த வேண்டும் என வடமாகாண முதலமைச்சருக்கெதிராகச் சுமந்திரன் சவால்விடுவது சிறுபிள்ளைத்தனமான செயல்.
தமிழ்மக்களின் உரிமைகளை வலியுறுத்தியும், அரசாங்கம் மற்றும் கூட்டமைப்பினரை எதிர்த்து எழுக தமிழ்ப் பேரணியொன்று இடம்பெற்றது.  யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் இடம்பெற்ற அந்த எழுக தமிழ்ப் பேரணியில் எத்தனை ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர் என்பது சுமந்திரனுக்குத் தெரியும்.
வடமாகாண முதலமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கெதிராக சமூக வலைத்தளங்கள் மூலமாக இளைஞர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க உடனடியாகவே முதலமைச்சரின் இல்லத்திற்கு முன்பாகக் கூடிய இளைஞர் கூட்டத்தையும், இரண்டாம் நாளில் வடமாகாணம் தழுவிய ரீதியில் வெற்றிகரமாகக் கடையடைப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டமையும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுகூடி முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்ததும்  சுமந்திரன் போன்றவர்களுக்கு ஏற்றுக் கொள்வது கடினமாகத் தானிருக்கும்.   ஏனெனில், முதலமைச்சருக்கு ஆதரவான மக்கள் எழுச்சி அவர்களை மிரட்டியுள்ளது என்பது தான் உண்மை எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts: