சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் வடமாகாணத்தில் குறைவடைந்துள்ளது.!

Wednesday, November 1st, 2017

 

சிறுவர்கள் மீதான பாலியல் வதை மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்கள் வடக்கு மாகாணத்தில் நான்கில் ஒரு வீதமாக நடப்பு ஆண்டில் குறைவடைந்துள்ளது என்று மாகாண சிறுவர் நன்நடத்தை பராமரிப்புத் திணைக்களத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாணத்தில் சிறுவர்கள் பல்வேறு வழிகளில் துர்நடத்தைகளுக்கு உள்ளாகின்றனர். குடும்பத்தில் உள்ளவர்கள் அல்லது பாதுகாவலர்கள், மது போதையில் உள்ளவர்களால் பிள்ளைகள் உடல் ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாகின்றனர்.

சிறுவர் மீதான இத்தகைய குற்றங்களில் குற்றவாளியாக இனம் காணப்படுபவர்களுக்கு நீதிமன்றங்கள் கடுமையான தண்டனைகளை வழங்கி வருகின்றன. இதன் மூலம் சிறுவர்கள் மீதான பாலியல்வதை மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்கள் நான்கில் ஒரு வீதமாக நடப்பு ஆண்டில் குறைவடைந்துள்ளது என்று அந்தப் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் 87 சிறுவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 22 சிறுவர்களும், மன்னார் மாவட்டத்தில் 32 சிறுவர்களும், வவுனியா மாவட்டத்தில் 63 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 47 சிறுவர்களுமாக கடந்த 2016 ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் 251 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நடப்பு ஆண்டில் ஒக்டோபர் மாதத்தின் இறுதிநாள் வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் 19 சிறுவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 சிறுவர்களும், மன்னார் மாவட்டத்தில் 12 சிறுவர்களும், வவுனியா மாவட்டத்தில் 8 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 19 சிறுவர்களுமாக மாகாணம் முழுவதும் 61 சிறுவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் புள்ளி விபரங்களின் அடிப்படையில் மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் அதிகமான சிறுவர்களும் முல்லைத்தீவில் மிகவும் குறைந்தளவான சிறுவர்களும் துன்புறுத்தல்கள், துர்நடத்தைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது கண்கூடு.

Related posts: