சமூகத்தை நல்வழிப்படுத்த அனைவரும் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் – சங்கானைக் கல்விக் கோட்ட அதிபர் சங்கம் !

Monday, July 2nd, 2018

நமது சமூகம் நெறிபிறழாமல் இறைசுவாசம் மனிதநேயப் பண்புகள் மிக்க சமூகமாகத் திகழவும் இளந் தலைமுறையினர் நற்பண்புகள் உள்ளவர்களாக வளர்வதற்கும் மதகுருமார்கள், கல்விச் சமூகத்தினர், சட்டத்துறை சார்ந்தவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சமூகத்தில் உள்ள பெரியோர்கள் அனைவரும் தமது பொறுப்புக்களை உணர்ந்து தட்டிக்கழிக்காமல் தனித்தும் கூட்டாகவும் முயற்சி எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் யாழ்ப்பாணம் சங்கானைக்கல்வி கோட்ட அதிபர்கள் சங்கம் மாணவி றெஜீனா படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்துள்ளது.

இது தொடர்பில் அவர்கள் அனுப்பிவைத்த கண்டன அறிக்கையில் உள்ளதாவது:

இது போன்ற குற்றச்செயல்கள் இலங்கைத் தீவிலும் குறிப்பாக வடமாகாணத்தில் பெருகி வருவதும் இதனை இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களே தொடர்ச்சியாக செய்து வருவதும் மனித நாகரிகம், ஜீவநேயப் பண்புகள், சட்டம், ஒழுங்கு, பரிபாலனம் வடபகுதியில் மிக மிக நலிவடைந்து சென்றுள்ளதா? அல்லது இந்தப் பண்புகள் இல்லாத காட்டுமிராண்டிகளாக நெறிப்பிறழ்ந்ததாக நமது சமூகம் மாறிவருகின்றதா? என்ற சந்தேகத்தையும் எற்படுத்துகின்றது.

இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்காமல் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் கிடைக்கப்பெற சட்டத்துறை சார்ந்தவர்களும் பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்பை நல்குதல் வேண்டும் என்றுள்ளது.

Related posts: