காணி நடுவர் சபைக்கு தவிசாளர் ஒருவரை நியமிக்குக: வடக்கு மாகாண ஆளுநரால் மத்தியஸ்த ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம்!

Wednesday, March 14th, 2018

நீதி அமைச்சு – காணி அமைச்சு ஆகியவற்றின் இணைந்த திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட காணி நடுவர் சபை உருவாக்கப்பட்ட போதும் தவிசாளர் இன்றி காணி நடுவர் சபை செயற்படுகின்றது.

எனவே சபைக்கு தவிசாளர் ஒருவரை நியமனம் செய்ய நடுவர் ஆணைக்குழுவின் தலைவர் முன்வரவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கடிதம் மூலம் கோரியுள்ளார்.

காணி நடுவர் சபை தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் குறிப்பிடுகையில் ஆசிய பவுண்டேஸன் நிதிப்பங்களிப்பில் நீதி அமைச்சு – காணி அமைச்சு என்பன இணைந்த வகையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு இணங்க வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் காணி சம்பந்தமான சிறப்பு நடுவர் சபை ஸ்தாபிக்கப்பட்டு யாழ்ப்பாண மாவட்டத்துக்கான காணி நடுவர் சபை யாழ்ப்பாணம் கொட்டடி நமசிவாய வித்தியாலயத்தில் பிரதி சனிக்கிழமைகளில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறுகின்றது.

எனினும் இந்தச் சபையின் சிறப்பு செயற்பாட்டுக்குப் பொருத்தமான தவிசாளர் இதுவரை நியமனம் பெறவில்லை.

எனவே காணி நடுவர் சபைக்கு தவிசாளர் ஒருவரை மத்தியஸ்த ஆணைக்குழு தலைவர் – செயலாளர் இணைந்த வகையில் ஒருவரை நியமிக்க வேண்டும்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்ட காணி நடுவர் சபையையும் விரைவில் ஆரம்பித்து காணி சம்பந்தமான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண முன்வர வேண்டும் என வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே கேட்டுள்ளார்.

Related posts: