கடந்தகால தவறுகளே இன்றைய பிரச்சினைகளுக்கு காரணம் – வடக்கின் ஆளுநர்!

Wednesday, November 22nd, 2017

கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகளே பாரிய பிரச்சினைகளுக்கு காரணங்களாகியுள்ளதால் அந்த வரலாற்றுத் தவறுகளை நிவர்த்திக்க புதிய அரசியலமைப்பின் தேவை அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது புதிய அரசியலமைப்பு தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்னவென ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினொல்ட் குரே மேலும் கூறுகையில்;

தனிச் சிங்களமொழி பிரகடனம், அன்றைய கோட்டா முறை போன்ற பாரபட்சமான வரலாற்றத் தவறுகளே இன்றைய பிரச்சினைகளுக்கு காரணமாகியுள்ளன. நாம் வரலாற்றை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் தவறுகள் எமக்குப் புரியும்.

சிங்களமொழி மட்டும் அரச கரும மொழியாக்கப்பட்ட போது ஒருமொழி மட்டும் அரச கரும மொழியினால் நாடு பிளவுபடும். இரண்டு மொழிகளும் அரச கரும மொழியினால் நாடு ஒன்றிணையும் என கொல்வின் ஆர்.டி.சில்வா கூறினார். இத்தகைய கருத்துக்களுக்கு செவிமடுக்காமல் செயற்பட்டதன் விளைவுகளையே இப்போது நாடு அனுபவிக்கின்றது.

இதே போன்றே கோட்டாமுறைமையும் வடக்கு மாகாணத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தக் கோட்டா முறையில் எந்தப் பொருளாதார முன்னேற்றமும் வடக்கில் ஏற்படவில்லை. வெள்ளையரின் ஆட்சியிலும் தெற்கில் மட்டுமே அபிவிருத்திகள் இடம்பெற்றன. வடக்கிற்கு எதுவுமே கிடைக்கவில்லை.

அன்று மாகாணசபை கொண்டு வரப்பட்டபோது நாடு பிளவுபடும், நாட்டைக் காட்டிக்கொடுக்கின்றார்கள் எனக் கூக்குரலிட்டவர்கள் கை, கால்களை வெட்டியவர்கள் ஏன் படுகொலைகளை செய்தவர்கள் கூட இன்று மாகாணசபை அமைச்சர்களாகவும், உறுப்பினர்களாகவும் உள்ளனர். இவ்வாறான செயல்களினால் நான் கூடப் பாதிக்கப்பட்டேன். வீட்டையும் சொத்துக்களையும் இழந்துள்ளேன்.

கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகளே பாரிய பிரச்சினைகளுக்கு காரணமாகியுள்ளன. எனவே அவை நிவர்த்திக்கப்படவேண்டியது அவசியம். அதற்கு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டியது அவசியம்.

பிள்ளையொன்று தாயின் வயிற்றில் இருக்கும் போது பலரும் பலவிதமாகக் கூறலாம். தாய்க்கு நீரிழிவு இருப்பதால் குழந்தைக்கும் நீரிழிவு இருக்கலாம் என ஊகிக்கலாம். அது போன்று தான் புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஊகிக்கப்படுகின்றது என்றார்.

Related posts:

பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டாலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு - கல்வி அமைச்சின்...
கொரோனா தொற்று இன்னும் உச்ச நிலையை தொடவில்லை : உயிர்ப்பலிகள் வேகம் அதிகரிக்கும் - உலக சுகாதார நிறுவ...
மின்சாரசபை கட்டண அதிகரிப்பு தாமதத்தால் பணவரவு பாதிப்பு - நாட்டின் நாணய கொள்கைக்கும் பாதிப்பு என மத்த...