உக்ரைன் ஏவுகணையே மலேசிய விமானத்தை வீழ்த்தியது: ரஷியா மீண்டும் திட்டவட்டம்!

Tuesday, September 18th, 2018

கிழக்கு உக்ரைனில் மலேசிய பயணிகள் விமானம் கடந்த 2014-ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்டது உக்ரைன் ராணுவத்திடம் இருந்த ஏவுகணை மூலமே என்று என்று ரஷியா மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அதனை நிரூபிப்பதற்காக, புதிய தகவல்களையும் அந்த நாடு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2014-ஆம் ஆண்டில், ரஷியாவில் தயாரிக்கப்பட்ட பியூகே’ ரக ஏவுகணை மூலம்தான் மலேசியாவுக்குச் சொந்தமான எம்ஹெச்17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

எனினும், அந்த ஏவுகணை உக்ரைன் ராணுவத்தால் ஏவப்பட்டது என்று தொடர்ந்து கூறி வருகிறோம். தற்போது அந்தக் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஏவுகணையின் வரிசை எண்ணை வெளியிடுகிறோம்.

எம்ஹெச்17 விமானத்தை சுட்டு வீழ்த்தியது 886847379 என்ற வரிசை எண் கொண்ட ஏவுகணையாகும்.

சோவியத் யூனியனின் ஓர் அங்கமாக உக்ரைன் இருந்தபோது, அந்த ஏவுகணை கடந்த 1986-ஆம் ஆண்டு அந்தப் பகுதிக்கு ரயில் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

பியூகே’ வான் பாதுகாப்புத் தளவாடத்தில் பயன்படுத்துவதற்கான அந்த ஏவுகணை, உக்ரைன் பகுதியிலிருந்த சோவியத் ராணுவத்தின் 20152 படைப் பிரிவுக்காக அனுப்பப்பட்டது.

சோவியத் யூனியன் உடைந்து உக்ரைன் தனி நாடாக பிரிந்த பிறகு, குறிப்பிட்ட அந்த ஏவுகணை ரஷியாவுக்கு திருப்பி எடுத்து வரப்படவில்லை. அந்த ஏவுகணையை உக்ரைன் ராணுவம் எடுத்துக் கொண்டது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் நெதர்லாந்துக்கு, இந்த ஆதாரத்தை அனுப்பியுள்ளோம்.

போலியான விடியோ: மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு முன்னதாக, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு உக்ரைன் பகுதிக்கு பியூகே’ ரக ஏவுகணை எடுத்துச் செல்லப்படுவதாக வெளியிடப்பட்ட விடியோ போலியானதாகும்.

அந்த விடியோவில் வாகனம் நகரும் திசைக்கு எதிர்த் திசையில் நிழல் நகருவதை வைத்தே அதனைத் தெரிந்து கொள்ளலாம் என்று ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

மலேசியாவிலிருந்து நெதர்லாந்துக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17-ஆம் தேதி சென்று கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், ரஷிய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில், அந்த விமானத்திலிருந்த 283 பேரும் உயிரிழந்தனர்.

அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக விசாரித்து வரும் கூட்டு விசாரணைக் குழு, விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை என்று கூறி வந்தது.

இந்த நிலையில், தரையிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கவல்ல ரஷிய ஏவுகணை மூலம்தான் எம்ஹெச்17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அந்த ஏவுகணை, ரஷியாவின் கர்ஸ்க் நகரில் நிலைகொண்டுள்ள அந்த நாட்டு ராணுவத்தின் விமான எதிர்ப்புப் படையின் 53-ஆவது பிரிவிடம் இருந்ததாகவும் நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகள் கடந்த மே மாதம் நேரடியாகக் குற்றம் சாட்டின.

இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்த ரஷியா, உக்ரைன் ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில்தான் மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதாகக் கூறி வந்தது.

இந்தச் சூழலில், தனது கூற்றை நிரூபிக்கும் நோக்கில், புதிய தகவல்களை ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Related posts: