இலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி: சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Saturday, April 18th, 2020

இலங்கையில் கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இதுவரையில் 77 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று உறுதியான 164 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 64 பேரின் இரத்த மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் எவருக்கும் கொரோனா இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்தியர் த.சத்யமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 15 ஆம் திகதி சுவிஸ் போதகர் தலைமையில் அரியாலையில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையில் பங்கேற்றவர்கள் வடக்கு மாகாணத்தில் அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், யாழ்பாணத்தில் இடம்பெற்ற குறித்த மத ஆராதனையில் கலந்துகொண்ட மற்றும் வேறு பகுதிகளில் தொடர்புகளைக் கொண்டிருந்த வவுனியாவைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதா என சோதனை நடவடிக்கை கடந்தவாரம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த சோதனை நடவடிக்கையின் இரண்டாம் கட்டப் பணிகள் பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனை மற்றும் சுகாதாரவைத்திய அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், வவுனியாவின் காத்தான்கோட்டம் மற்றும் ஓமந்தை,புளியங்குளம் ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட 14 பேரிடம் குறித்த இரத்தமாதிரிகள் சேர்ககப்பட்டதுடன் அவை மேலதிக ஆய்வுகூட பரிசோதனைக்களிற்காக அனுராதபுரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், குறித்த நபர்களில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லையென்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த 50 பேரிடம் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை எனவும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts: