இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருநாள் விஜயம் மேற்கொண்டு இன்றுமாலை இலங்கைவருகின்றார்!

Thursday, May 11th, 2017

இலங்கையில் முதற்தடவையாக நடைபெறவுள்ள ஐக்கியநாடுகளின் 14 வது சர்வதேச வெசாக் பௌர்ணமி தினத்தில் பங்கேற்கும் பொருட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இன்றையதினம் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையததிற்கு இன்றுமாலை 6.15 மணியளவில் வருகைதரும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை, இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் வரவேற்கவுள்ள அதேவேளை, செங்கம்பள வரவேற்பும் படையணி மரியாதையும் அளிக்கப்படவுள்ளது.

தொடர்ந்து கங்காராம விகாரையில் நடைபெறும் விஷேட பூசைவழிபாடுகளில் பங்கெடுக்கும் இந்தியப் பிரதமர், ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரவுவிருந்து பசாரத்திலும் கலந்துகொள்வதுடன்,அலங்கார வெசாக் பந்தலையும் இதன்போது அங்குரார்ப்பணம் செய்துவைக்கவுள்ளார்.

இதனிடையே நாளையதினம் காலை 9.00 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள சர்வதேசவெசாக் நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி அங்குரார்ப்பணம் செய்துவைக்கவுள்ளதுடன், வெசாக் தொடர்பில் விஷேட உரையையும் நிகழ்த்தவுள்ளார்.

அதனையடுத்து இந்தியப் பிரதமர் டிக்கோயா கிளங்கன் பகுதியில் இந்திய அரசின் நிதிப்பங்களிப்படன் நிர்மாணிக்கப்பட்ட வைத்தியசாலையை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கையளிக்கும் அதேவேளை, மகப்பேற்று விடுதி உள்ளிட்ட இரண்டு விடுதிகளின் பெயர்ப் பலகைகளையும் திரைநீக்கம் செய்துவைப்பார்.

முன்னராக நோர்வூட் செல்லும் பிரதமர் மோடி மலையகத்தின் அரசியல் தலைவர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளி மக்களின் மாபெரும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளார். இக்கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் உரை நிகழ்த்தவுள்ளனர்.

கூட்டத்தின் நிறைவில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் அமைச்சர் மனோகணேசன் ஆகியோர் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினரை தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தைகளையும் நடத்தவுள்ளார்.

அங்கிருந்து கண்டிக்கு செல்லும் பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டியிலுள்ள  ஜனாதிபதி மாளிகையில் மதியபோசன விருந்தளிப்பார்.

தொடர்ந்து தலதாமாளிகைக்குச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு நடைபெறும் சிறப்பு பூசைவழிபாடுகளில் கலந்துகொள்ளும் அதேவேளை ,மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளையும் தனித்தனியே சந்தித்துபேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இதனிடையே கண்டியில் அமைக்கப்பட்டுள்ள கண்டிய நடன நிறுவனத்தின் பெயர்ப் பலகையையும்; திறந்துவைக்கும் பிரதமர் மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Related posts:


இழப்பீட்டு பணியகம் ஊடாக ஆயிரத்து 753 குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் வ...
பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழிவு - கல்வி அமைச்சு அறிவிப...
IMF உடன்படிக்கையின் தவறான புரிதல் - எதிர்க்கட்சிகளால் நாட்டை ஆள முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது - ...