அரச கட்டின அங்கியை தயாரிப்பதற்கு பண்டைய பாரம்பரியத்தின் படி ஜனாதிபதி நூல் வழங்கிவைப்பு!

Saturday, October 31st, 2020

அரச கட்டின பெருவிழாவுக்கான கட்டின அங்கியை தயாரிப்பதற்காக பண்டைய பாரம்பரியங்களுக்கு ஏற்ப ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் கரங்களினால் நூல் வழங்கி வைக்கப்பட்டது.

அரச கட்டின பெருவிழா நவம்பர் மாதம் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சோமாவதீ புனித பூமியில் நடத்துவதற்கு பத்திக், கைத்தறி துணிகள், உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இரண்டாவது பராக்கிரம மன்னரின் காலத்திற்கு பின்னர் அரச அனுசரனையில் கட்டின பெருவிழா இடம்பெறும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

பருத்தி பயிரிட்டு, நூல் நூற்று அந்த நூலினால் நெய்யப்படும் பருத்தித் துணியை பயன்படுத்தி கட்டின அங்கியை தைத்து, காணிக்கை செலுத்துவது பண்டைய அரச காலத்தில் இடம்பெற்ற ஒரு பாரம்பரியமாகும்.

அந்த பாரம்பரியத்திற்கு ஏற்ப கட்டின அங்கியை தயாரிப்பதற்கு தேவையான நூல் ஜனாதிபதி அவர்களின் இல்லத்தில் வைத்து அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

மெதிரிகிரிய, பிசோபுர கிராமவாசிகள் இந்த நூலை பயன்படுத்தி, கைத்தறி இயந்திரங்களின் மூலம் கட்டின அங்கியை தயாரிக்கும் பணியை இன்று (31) முதல் ஆரம்பிக்கவுள்ளனர். ஒரு வார காலம் நெய்யப்படும் இந்த அங்கி 07ஆம் திகதி ஊர்வலமாக சோமாவதி புனித பூமிக்கு கொண்டுவரப்படும்.  இவ்வருடம் முதல் அரச கட்டின பெருவிழாவை வருடாந்தம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டிள் உள்ள 40000 க்கும் அதிகமான தேரர்களுக்கு தேவையான உரிய தரத்துடன் கூடிய காவி அங்கிகள் ஒரு இலட்சத்துக்கும் அதிகம் வருடாந்தம் இறக்குமதி செய்யப்படுகிறது.

உள்நாட்டு கைத்தறி இயந்திரங்களை பயன்படுத்தி உயர் தரத்தில் அந்த அங்கிகளை உள்நாட்டிலேயே நிறைவேற்றுவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


அத்தியவசிய சேவை ஊழியர்களுக்காக விசேட ரயில் சேவை - ரயில் போக்குவரத்து அத்தியட்சிகர் தெரிவிப்பு!
கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 144 கோவிட் தொற்றாளர்கள் - மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர...
வர்த்தகர்களுக்கான அபராத தொகையை அதிகரிக்கும் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் புதனன்று நாடாளுமன்றுக்கு ...