50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொடுத்தவர் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா: கூட்டமைப்பால் ஒரு கழிவறையைக் கூட கட்டிக்கொடுக்க முடியுமா?- தோழர் ஸ்ராலின்!

Thursday, February 1st, 2018

உப்புவெளிப் பிரதேச சபை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தின் பிரதேசசபைகளை நாம் வெற்றிகொள்ளும் பட்சத்தில் எமது ஆளுமையை நிரூபித்துக் காட்டுவோம் என  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின்  தெரிவித்துள்ளார்.

திருகோணமலை ஆனந்தபுரி பகுதியில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நாட்டில் கொடிய யுத்தம் நடைபெற்ற காலத்திலும் சரி யுத்தம் நிறைவடைந்த காலத்திலும் சரி தமது மக்களால் பதவிகளை பெற்று தமது குடும்பங்களுடன் சுகபோக வாழ்வு வாழ்ந்துகொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்கள்படும் துன்ப துயரங்கள் தொடர்பில் எதுவித அக்கறையும் செலுத்தாதிருந்துவிட்டு இன்று தேர்தல் காலம் வந்தவுடன் மக்களை மறுபடியும் ஏமாற்றி அவர்களது வாக்குகளை கொள்ளையடிக்க தொடங்கிவிட்டனர்.

மூன்று தசாப்தங்களாக தமது சுயநலமே பெரும்பணி என்று இருந்த சம்பந்தனும் அவரது பங்காளிகளும் இன்று எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களுக்காக தென்னிலங்கையுன் தான் கொண்டிருந்த நல்லுறவு காரணமாக பெற்றுக்கொடுத்த பெரும் பணிகளையெல்லாம் தமது சாதனைகள் என மக்களிடம் பொய்யுரைத்து வருகின்றனர்.

அதிகாரங்களை தம்வசம் வைத்திருந்தும் தமிழ் மக்களுக்காக ஒரு கழிவறையைக் கூட கட்டிக்கொடுக்க திராணியற்றுக் கிடக்கும் சம்பந்தன் தலைமையிலானவர்கள் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்திய அரசுடன் கொண்டிருந்த நல்லுறவு காரணமாக பெற்றுக்கொடுக்கப்பட்ட 50 ஆயிரம் கல்வீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்களுக்கு உரிமைகோருவதானது அவர்களது கீழ்த்தரமான  அரசியல் செயற்பாடாகவே அமைந்துள்ளது.

இந்த பொய்யுரைகளை இனியும் நம்புவதற்கு எமது மக்கள் தயாராக இல்லை என்ற நிலை தற்போது உருவாகிவிட்டது. இதனால் தமக்கான மாற்றுத் தலைமையாக தமிழ் மக்கள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை இனங்கண்டுகொண்டுள்ளனர்.

அந்தவகையில் இந்த உப்புவெளிப் பிரதேச சபையை மக்கள் தமது கரங்களுக்குத் தரும் பட்சத்தில் திருகோணமலைக்கு மட்டுமல்ல கிழக்கு மாகாணத்திற்கும் ஒர் முன்னுதாரணமான பிரதேச சபையாக நிர்வகித்துக் காட்டுவோம் என்றார்.

Related posts: