வவுனியாவில் அழிக்கப்பட்ட காடுகளை மீள் உருவாக்க 10 வருடங்கள் தேவை – ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் சுட்டிக்காட்டு!

Thursday, December 24th, 2020

வவுனியாவில் அழிக்கப்பட்ட காடுகளை மீள் உருவாக்க 10 வருடங்கள் தேவை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒரங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான குலலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.

நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்குடன் பத்து இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியல் இன்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் றம்பைவெட்டி கிராமத்தில் குறித்த நிகழ்வு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் முதன்மை அதிதிகளாக கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் மற்றும் அரச அதிபர் சமன்பந்துலசேன, பிரதேச செயலாளர் ந.கமலதாசன் ஆகியோர் மரக்கன்றுகளை நாட்டிவைத்தனர்.

இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட திலீபன் “மரநடுகை நிகழ்வுகள் போலியான வகையில் இடம்பெறக்கூடாது. இந்த திட்டம் அப்படி இருக்காது என்று நினைக்கிறேன்.

மக்களிற்காகவே மரங்கள், எனவே கிராமங்கள், ஆலயங்கள், மைதானங்களிற்கு அண்மையில் மரங்களை நடமுடியும். வவுனியாவை பொறுத்தவரை பத்து வருடங்களிற்கு இப்படியான திட்டத்தினை நடைமுறைப்படுத்தினாலேயே காணாமல் போன மரங்களிற்கு ஈடுசெய்யமுடியும்.

தற்போது அரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளரின் துரித நடவடிக்கைகளால் ஓரளவு அது கட்டுப்பாடிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த விடயம் தொடரவேண்டும்.

வில்பத்து என்ற இடத்திலும் காடழிப்பு இடம்பெற்றிருந்து. கேட்டால் குடியேற்றம் என்கிறார்கள். உரிய அதிகாரிகளிடம் கேட்டால் குடியேற்றத்திற்கு உகந்த இடத்தினை ஒதுக்கிகொடுத்திருப்பார்கள்.

காடுகளை அழித்து அதனை செய்யவேண்டிய தேவையில்லை. அத்துடன் நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்குடன் வரும் காலங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியினை நிறுத்துவதற்கு முயற்சி எடுக்கவேண்டும்.“ எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: