மக்களின் நிலங்களை அபகரிக்க நல்லா ட்சி அரசுக்கு அனுசரணை வழங்குகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு – ஈ.பி.டி.பி யின் தவநாதன் குற்றச்சாட்டு!

Tuesday, September 19th, 2017

தமிழர் நில அபகரிப்பின் ஒரு நடவடிக்கையே சரணாலயம் என்ற போர்வையில் மக்களின் பூர்வீக பூமிகளை சத்தமில்லாமல் நல்லாட்சி என சொல்லப்படும் அரசு அபகரித்து வருவதாக வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கிராமசேவகர் பிரிவில் கோவில் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க உப-தலைவர் க. ஆனந்தராசா தலைமையில் இடம்பெற்ற வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் முள்ளியான் போக்கறுப்பு சுண்டிக்குளம் ஆகிய கிராமசேவகர்கள் பிரிவில்  உள்ள மக்கள் நில அபகரிப்பை தடுப்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்றையதினம் நடைபெற்றது. கோவில் சுனாமி பொது மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மக்களது கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நாம் கடந்த அரசுடன் இணக்க அரசியல் மேற்கொண்ட சமயம் பாரிய அபிவிருத்திகளையும் மக்கள் நிலங்களையும் விடுவிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக  ஈடுபட்டு வந்திருந்தோம். அதன் முயற்சியாகவே அறிவியல் நகர் விடுவிக்கப்பட்ட இன்று அது பல்கலைக் கழகமாக தோற்றமளித்து கல்வியாளர்களையும் ஆராட்சியாளர்களையும் உருவாக்கிவருகின்றது. அது நாம் அன்றைய அரசுக்கு கொடுத்த அழுத்தமே அவ்வாய்ப்பைப் பெற்றுத்தந்தது.

அத்துடன் வன இலாகாவுக்கு சொந்தமான காணிகளைக் கூட எமது தலைவர்  டக்ளஸ் தேவானந்தா பளை. தம்பகாமம், வட்டக்கச்சி போன்ற இடங்களில் பெற்றுத்தந்துள்ளார். அத்துடன் ஆலயக் காணிகள் பொதுக்காணிகளை பெற்றுக்கொடுப்பதிலும் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அயராது பாடுபட்டுவருகின்றார்.

ஆனால் அரசுடன் சேர்ந்து இயங்குகின்ற தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களின் நிலங்களை பாதுகாத்து கொடுக்கவேண்டும் என்பதில் கூட அக்கறையின்றி அரசுடன் இருந்து வருகின்றார்கள்  என தெரிவித்தார்.

மேலும் இப்பகுதி நில அபகரிப்பு தொடர்பாக தன்னாலான நடவடிக்கையை மேற்கொண்டு உரிய இடங்களில் இவ்விவகாரத்தை முன்னிலைப்படுத்தி இதனை தடுக்க முயல்வதாகவும் தெரிவித்தார்.

இங்கு தலைமயுரையாற்றிய கோவில் கடற்றொழிலாளர் சங்க உபதலைவர்  ஆனந்தராசா அவர்கள் தேர்தலுக்கு மட்டுமே கூட்டமைப்பினர் இப்பகுதிக்கு வருகின்றனர். மீண்டும் தேர்தல் அறிவிப்பு வந்ததும் வருவார்கள். அரசுடன் இயங்கும் இவர்கள் எமது கிராம, சமூக மக்களின் நலன்களில் அக்கறை இன்றி உள்ளனர் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: