தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழர் தரப்புக்களை ஒன்றி ணைப்பேன் – நாடாளு மன்றில் எம்.பி. டக்ளஸ் தேவானந்தா!

Monday, February 19th, 2018

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் இனி வரும் காலத்தில் தமிழர் தரப்பில் இருந்து தவறுகள் ஏதும் நடக்காது என்றே நான் நம்புகிறேன். இது குறித்து நான் விரைவில் தமிழர் தரப்பில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் ஒன்று பட்ட உடன்பாட்டுக்கு வருமாறு பகிரங்க அழைப்பு விடுக்க தீர்மானித்திருக்கிறேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவையின் இறுதி வரைவு தொடர்பான விவாதத்தில் இன்றையதினம் கலந்துகொண்ட உரையாற்றுiகியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் –

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான நடத்தைக் கோவையின் இறுதி வரைபு, அங்கீகாரத்திற்கு என முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் எனது கருத்துக்களையும் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான பொறுப்புகள், கடமைகள், நடத்தைகள் குறித்ததான நாடாளுமன்றத்திற்குள்ளும், தேர்தல் தொகுதியிலும், பொது மக்களிடத்தேயுமான செயற்பாடுகள் கடந்த பல வருடங்களாக இந்தச் சபையிலே, பல்வேறு சந்தர்ப்பங்களில் கருத்துக்கள் முன்வைக்கப் பட்டிருந்தும், இன்றைய நிலையில் அந்த விடயமானது ஓர் இறுதி வரைபாக இந்தச் சபையின் அங்கீகாரத்திற்கு வந்திருப்பதையிட்டு இதற்கென முன்முயற்சிகளுடன் வெகு அக்களை கொண்டு உழைத்துள்ள கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களுக்கு முதலில், எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நாடாளுமன்ற உறுப்பினர்களது பொறுப்புகள், கடமைகள், செயற்பாடுகள் தொடர்பிலான விளக்கமின்மைகள் பொது மக்களிடையே பெருமளவில் காணுப்படுகின்ற நிலைமைகளையும், ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களிடையேயும் காணப்படுகின்ற நிலைமைகளையும் நாம் காணுகின்றோம். இது அவர்களது தவறு என்பதல்ல. பொறுப்புகள், கடமைகள் மற்றும் நடத்தைகள் தொடர்பிலான ஒழுங்கமைந்த ஒரு கோவையின் தேவையிலேயே இது தங்கியிருக்கின்றது.
நாட்டின் நிறைவேற்றாளரை ஒரு பக்கத்திலும், பொது மக்களை மறு பக்கத்திலும் வைத்துப் பார்க்கின்றபோது, இதன் மத்தியில் வைத்துப் பார்க்கப்பட வேண்டியவராக, யாப்பியலாளராக இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினரே உள்ளார் என்பதை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும்.
சுதந்திரத்திற்குப் பின்னரான எமது நாட்டில் கொள்கை வகுத்தல் மற்றும் கொள்கை ரீதியிலான தீர்மானங்களை எடுக்கின்ற துறைசார்ந்தும், சட்ட உருவாக்கத்தினதும் முக்கிய தீர்மானச் சக்தியாக இருப்பவர் நாடாளுமன்ற உறுப்பினரே ஆவார். பிரித்தானிய நாடாளுமன்ற சம்பிரதாயத்தின் தொடர் என்ற வகையில் ஆரம்பிக்கப்பட்டிருந்த எமது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் தொடர்பிலான விடயங்களைப் பொறுத்தமட்டில், தேர்ந்தெடுக்கப் படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் யார் என்பதற்கே எமது மக்கள் முக்கியத்துவம் வழங்குகின்றார்களே அன்றி, அவரது கடமைப்பாடுகள் யாவை? என்பது தொடர்பில் முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை.
யாப்பினை உருவாக்குகின்றவர் என்பதாலும், அந்த யாப்பிற்கு உட்பட்ட வகையில் சட்ட உருவாக்கங்களின்போது, மக்களின் பிரதிநிதியாக இருப்பவர் என்பதாலுமே நாடாளுமன்ற உறுப்பினர் யாப்பியலாளர் என இனங்காட்டப்படுகின்றார் என்பதனை பொது மக்களில் பெரும்பாலானவர்களும், ஒரு சில நபடாளுமன்ற உறுப்பினர்களும்கூட அறிந்திராத நிலைமைகளும் இல்லாமல் இல்லை. இத்தகையதொரு நிலைமையானது குறிப்பாக, 1977ஆம் ஆண்டின் அரசியல் யாப்பிற்கிணங்க தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களது வருகையின் பின்பாக எழுந்துள்ளதென அரசியல் விமர்சகர்கள் கூறகின்றதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அதேநேரம், நாட்டில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மாற்றியமைப்பது குறித்தும் பல்வேறுமட்ட கலந்துரையாடல்களை நாம் கண்டு வருகின்றோம். அவ்வாறு, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையில் மாற்றங்கள் கொண்டுவரப் படுமானால், அதற்கேற்ற வகையில் நாடாளுமன்றத்தை மேலும் பலம் மிக்கதாகவும், மக்கள் நலன்சார்ந்த அக்கறை கொண்ட உறுப்பினர்களையும், அறிவார்ந்த உறுப்பினர்களையும் கொண்டதாகவும் பலப்படுத்திக் கொள்வதற்கும் மேற்படி நடத்தைக் கோவையானது உறுதுணையாக அமையும் என எண்ணுகின்றேன்.
அத்துடன், நாட்டில் ஸ்திரமான ஒரு ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியமாகும். அது பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு போன்ற அனைத்து துறைகள் சார்ந்தும் பலமிக்கதாகவும் நிலையானதாகவும் இருக்கும் பட்சத்திலேயே தமிழ்பேசும் மக்களது அன்றாட, அடிப்படை மற்றும் அரசியல் உரிமைகள், பிரச்சினைகள் வரை தீர்த்துக்கொள்ள வழிவகுப்பதாக அமையும். எமது மக்கள் கடந்தகால யுத்த மற்றும் தொடர் காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அம்மக்களது வாழ்க்கையின் மீள் எழுச்சிக்காக ஒரு நிலையான ஆட்சியின் தேவையை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.
அரச நிர்வாகத்தின் உரிமையானது அந்த அரசுக்குரிய மக்களுக்குரியதாகும் என்ற அடிப்படை எண்ணக்கருவானது எமது நாடாளுமன்ற ஆரம்ப நிலையிலிருந்து, அது ஒரு நிறவனமயமாக்கல் என்ற பிரித்தானிய நாடாளுமன்ற வழிமுறைக்கேற்ற வகுக்கப் பட்டிருந்திருந்ததைக் காணலாம். அதாவது, மக்கள் தாங்கள் சார்ந்த தீர்மானங்களை தங்களுக்கென எடுப்பதற்கான வாய்ப்பினை உருவாக்கிக் கொள்வதென்பது இதனது எதிர்பார்க்கப்படுகின்ற நோக்கமாகின்றது. அதே நேரம், பிரித்தானியரின் பாராளும் கொள்கைக்கிணங்க, இந்தச் சபையானது பாராளுமன்றம் எனத் தமிழில் குறிப்படப்பட்டாலும் இச் சபையானது தமிழ் மொழியில் நாடாளுமன்றம் என்றே குறிப்பிடப்படல் வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
மக்களால் தெரிவு செய்யப்பட்டு இங்கு அனுப்பிவைக்கப்படுகின்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற விN~ட பொறுப்புகள் உண்டு. இந்த விN~ட பொறுப்பானது நாட்டினது அரசியல் யாப்பின் ஊடாக சட்டமாக முன்வைக்கப்படுகின்றது.
இத்தகைய நிலைமைகளைக் கருத்திற் கொண்டு பார்க்கின்றபோது, மக்களுக்கும் தமக்கும் இடையிலான சமூக பிணைப்பினை மதித்து செயலாற்ற வேண்டிய நிலையில் இருக்கின்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம், அதனை செவ்வனே நிறைவேற்றுவதில் ஆரம்பந்தொட்டு உறுதியாகவே இருந்து வருகின்றோம் என்பதை இந்த சபையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
1994ஆம் ஆண்டில் நாம் இந்த உயரிய சபையிலே காலடி எடுத்து வைத்தவர்கள். அக்காலம் தொடக்கம் இன்று வரை நான் தொடர்ந்தும் இந்தச் சபையினை எமது மக்கள் சார்பில் பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றேன். இந்தக் காலகட்டத்திற்குள் அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் எனக்குக் கிடைத்திருந்தன. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும், அமைச்சர் என்ற வகையிலும் நான் எனது கடமைகளை – பொறுப்புகளை மிகவும் நியாயமான முறையில், இந்த நாட்டிலே வாழுகின்ற அனைத்து மக்கள் சார்பாகவும் என்னால் இயன்ற வரையில் நிறைவேற்றியுள்ளேன் என்றே கருதுகின்றேன்.
அந்த வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தத்தமது பொறுப்புக்களையும், கடமைகளையும் உணர்ந்து கொள்வது என்பது மிகவும் அவசியமானதொரு விடயமாகும். எமது நாட்டில் தொடர்ந்தும் நிகழ்ந்து வருகின்ற பல்வேறு சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன என்பதையும் இங்கு தெரிவித்தாக வேண்டும்.
குறிப்பாக, எமது நாட்டைப் பொறுத்தவரையில் அரச பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்வதிலிருந்து, அரச நிறுவனங்களுக்கு பணியாளர்களை சேர்த்துக் கொள்வது வரையில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் தொடர்வதாகவே நாளாந்த ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறான அரசியல் கலாசாரங்கள் மாற்றப்பட வேண்டும். எங்களைத் தெரிவு செய்கின்றவர்களாக எமது மக்களே உள்ளனர். எனவே, நாங்கள் எமது மக்களின் நலன்களிலிருந்தே தீர்மானங்களை எடுத்து, செயற்பட வேண்டுமே அன்றி, எமது மக்களை மறந்துவிட்டல்ல என்பதனை நாம் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் எமது மக்களால் தெரிவு செய்யப்பட்டு, தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் எமது மக்களை மறந்து செயற்பட்டிருந்த பலர் இன்று தமது எதிர்கால அரசியல் இருப்பு தொடர்பில் சிந்திக்கவே இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகையவர்களால் எமது மக்களுக்கென ஏற்படுத்தப்பட்ட பயன்பாடுகள் எதுவுமற்ற நிலையில், வீணடிக்கப்பட்ட காலகட்டத்துக்குள் தள்ளப்பட்டுள்ள எமது மக்கள் வெறும் எதிர்பார்ப்புகளை மட்டுமே சுமந்தவர்களாக இன்னமும் வாழ்ந்து வருகின்றனர்.
மக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சமூகக் கடப்பாட்டு இடைவெளியானது அதிகரித்துள்ள நிலையில், அம் மக்கள் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகின்ற பிரதிநிதிகள் என்ற வகையில் இந்தப் பிரதிநிதிகள் ஊடான அம் மக்களின் தேவைகள் – பிரச்சினைகள் என்பன தேங்கிக் கிடக்கின்ற நிலைமையினை அவதானத்தில் கொள்ள வேண்டும்.
இத்தகைய நிலைமைகள் எமது மக்கள் மத்தியில் ஏற்படக்கூடாது என்பதற்காகவே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாங்கள் தொடர்ந்தும் எமது மக்கள் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்ற ஒரு கொள்கையை தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றோம். இந்தக் கொள்கை வழியானது, எமது மக்களையும், எமது மக்களது தேவைகள் மற்றும் பிரச்சினைகளையும் தெளிவுற புரிந்து கொள்வதற்கும், அவற்றைத் தீர்ப்பதற்கும் எமக்கு உறுதுணையாக இருக்கின்றது.
இத்தகையதொரு நிலையில்தான் மீண்டும் வரக்கூடிய தேர்தல்களில் எமது மக்களின் வாக்ககுளைப் பெறுவதற்காக இனவாதம் போன்ற மிகவும் இலகுவில் பேசக்கூடிய இனவாதக் கருத்துகள் இவர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் அதனது பாரதூரமான விளைவுகள் பற்றி அக்கறை கொள்ளப்படாத காரணத்தினால், எமது மக்களிடையே அவ்விதமான – மனிதாபிமானமற்ற கருத்தியல்கள் பதியப்பட்டு விடுகின்றன.
இவ்வாறான நிலையில், இனவாதம் கதைத்து, மக்களது வாக்குகளை ஒரு தரப்பினர் பெற்றுக் கொள்கின்ற நிலையில், அத்தரப்பினரை தோற்கடித்து எமது மக்களின் வாக்குகளைப் பெற எண்ணுகின்ற மற்றைய தரப்பினர், முன்னைய தரப்பினரைவிட அதிகளவில் இனவாதம் கதைக்கவே முற்படுகின்றனர். இந்த நிலை, வடக்கில் மட்டுமன்றி, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தொடர்ந்தேர்ச்சியாக இடம்பெற்று வருவதால், யுத்தத்திற்கு பின்னரான எமது நாட்டில் தேசிய நல்லிணக்கம் என்பது எமது மக்கள் மத்தியில் இன்னமும் அடிப்படை சாத்தியமற்ற விடயமாகவே இருந்து வருகின்றது.
இலங்கைத்தீவில் பல தசாப்தங்களுக்கு மேலாக கூர்மையடைந்திருக்கும் பிரதான பிரச்சினையாக இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சினையே இருந்து வருகின்றது.
ஆனாலும், இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சினையாகிய தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினை என்பது இன்று வரை தீராப்பிரசினையாகாவே நீடித்து வருகின்றது.
ஆட்சியதிகாரங்களை கைப்பற்றுவதும், ஆட்சி மாற்றங்களை உருவாக்குவதும் தென்னிலங்கையின் பிரதான கட்சிகளின் அக்கறையாக இருந்து வருவதை நான் தவறு என்று கூறவில்லை.
எந்தவொரு அரசியல் தரப்புகளுக்கும் இந்த விருப்பங்கள் இருந்தே ஆகும். ஆனாலும் அதே விருப்பங்களை போல் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்திலும் அக்கறை காட்ட வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் இனி வரும் காலத்தில் தமிழர் தரப்பில் இருந்து தவறுகள் ஏதும் நடக்காது என்றே நான் நம்புகிறேன்.
இது குறித்து நான் விரைவில் தமிழர் தரப்பில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் ஒன்று பட்ட உடன்பாட்டுக்கு வருமாறு பகிரங்க அழைப்பு விடுக்க தீர்மானித்திருக்கிறேன்.
அரசியல் முரண்பாடுகளுக்கு அப்பால், தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமை என்ற பொது உடன்பாடில் அனைத்து தமிழ் கட்சி தலைமைகளோடும் நான் பேசவும் தயாராக இருக்கின்றேன்.
இலங்கைத்தீவின் இறைமைக்கு எதிராக நான் எதையும் கேட்கவில்லை. ஆனாலும்,.. அந்த இறைமைகள் தமிழ் பேசும் மக்களுக்கும் பகிரப்பட வேண்டும் என்பதையே நான் கேட்கிறேன்.
பகிரப்படும் இறைமைகள் பறிக்கப்படக்கூடாது என்பதையும், அதில் மத்திய அரசின் தலையீடுகள் தவிக்கப்பட வேண்டும் என்பதையும் நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.
மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!!
இதுவே எங்கள் அரசியல் கோட்பாடு. அதை அடைவதற்கு நாம் தெரிவு செய்திருக்கும் வழிமுறை என்பது உங்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் ஒன்றாகும்.
13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல் படுத்தி, அதை மேலும் பலப்படுத்தி அதிலிருந்து முன்னோக்கி செல்வதே எமது விருப்பமாகும். இதுவே நடைமுறைச்சாத்தியமான அணுகுமுறையும் ஆகும்.
நான் கூறும் இந்த வழிமுறை ஊடாக இலங்கை தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் திசை நோக்கி நாம் செல்ல முடியும்.
தமிழர் தரப்பில் இருந்து இன்று உரிமைக்கு குரல் கொடுக்கும் நாம் அரசின் உறவுக்கு கரம் கொடுக்கவும் தயாராகவே இருக்கின்றோம்.
இது வரலாறு எமக்கு கற்றுததந்த பாடங்கள். இந்த அணுகு முறை அடுத்து வரும் சந்ததிக்கு தெரியாமல் போகலாம்.
ஆகவே,., வரலாற்று அனுபங்களின் ஊடாக நாம் எடுத்திருக்கும் எமது நிலைப்பாடு எமது காலத்திலேயே வெற்றியாக்கப்பட வேண்டும்.
இல்லையென்றால் இனி வரும் தமிழ் பேசும் சந்ததி போதிய அனுபவமின்றி வேறு விதமாக சிந்திக்கும்.
மறுபடியும் எமது மண்ணில் இனக்குரோதங்களுக்கும் இன முரண்பாடுகளுக்கும் வித்திட்டு விடும்.
ஆகவே, நீண்ட நெடிய அனுபவம் மிக்க எமது காலத்திலேயே இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு சுலபமாக தீர்வு காணும் வாய்ப்பை நாம் பயன்படுத்த வேண்டும்.
தென்னிலங்கை அரசியல் தலைமைகளோ அன்றி தமிழ் பேசும் அரசியல் தலைமைகளோ இந்த தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை அடுத்த சந்ததிக்கு சுமத்திவிட்டு சென்று விடுவது மாபெரும் வராலற்று தவறாகும்.
இந்த தலைமுறையிலேயே நாம் அனைவரும் ஒன்று பட்டு தீர்வு காண வேண்டும்.
சமாதானப்புறாக்களை கையிலேந்தி நாம் வந்தவர்கள்.
எங்கள் கைளில் உரிமைகளை தந்து கைகுலுக்கி கொள்ளுங்கள்!
இந்த அரசு ஆரம்பந்தொட்டு வலியுறுத்தி வருகின்ற தேசிய நல்லிணக்கம் குறித்த விடயத்தில் நாம் வெற்றி காண வேண்டும். அதற்காக, அரசியல் உரிமைப் பிரச்சினைக்கானத் தீர்வு உட்பட எமது மக்களின் உணர்வு ரீதியிலான பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
காணாமற்போனோரைக் கண்டறிவதற்கான உறவுகளின் போராட்டமானது கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பித்து இற்றைக்கு சரியாக ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. இந்த உறவுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றனவே அன்றி, இதுவரையில் இவர்களது பிரச்சினைக்கு எந்தவொரு பதிலும் வழங்கப்படவில்லை.
தங்களது சொந்த காணி, நிலங்களை விடுவிக்கக்கோரி கேப்பாப்புலவு மக்கள் இன்று 355 நாட்களாகப் போராடி வருகின்றனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து சாத்தியமான ஏற்பாடுகள் இன்னமும் முன்னெடுக்கப்பட்டதாக இல்லை.
மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் அடிப்படை வசதிகள்கூட இல்லாமை காரணமாக பல்வேறு பகுதிகளைவிட்டு வெளியேறுகின்ற நிலைமைகள் காணப்படுகின்றன.
வலிகாமம் வடக்கு மக்களில் இன்னமும் கணிசமான தொகையினர் மீளக் குடியேற்றப்படாத நிலையில், முகாம்களில் அவர்கள் உள, உடல் ரீதியில் அனுபவித்து வருகின்ற துன்ப, துயரங்கள் ஏராளமாகும்.
இந்த மக்கள் தங்களைப் பாதித்து வருகின்ற விடயங்களிலிருந்து, தங்களை மீட்டெடுப்பதற்காகவே தமது பிரதிநிதிகள் என்ற ரீதியில் வாக்களித்து, நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை அனுப்பியுள்ளனர். அந்த வகையில், அம் மக்களுக்கு உதவ முடியாதபோது, நாடாளுமன்;ற உறுப்பினர் பதவி என்பது தேவைதானா? என்கின்ற நிலையே எமது மக்கள் மத்தியில் உருவாகின்றது. இது நியாயமான நிலைப்பாடு என்பதில் சந்தேகமில்லை.
மக்களிடம் பெறுகின்ற வாக்குகள் அந்த மக்களின் பணிகளுக்காக மாற்றீடு செய்யப்பட வேண்டும்;. அதனை சொந்த அரசியல் நலன்களுக்காக – அல்லது கட்சி அரசியல் நலன்களுக்காக மாத்திரம் பயன்படுத்தப்படுகின்ற நிலைமைகள் எப்போது தவிர்க்கப்படுமோ, அப்போதுதான் எமது மக்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்பதை இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.
இனவாதம் தூண்டப்பட்டு, அதனால் பெறப்படுகின்ற மக்களது வாக்குகள், இன்னொரு இனத்தை அழிப்பதற்கே என அர்த்தப்படுத்திக் கொள்வது கொலைக்குச் சமமானது. வாக்கு கேட்பவர்கள் எந்தளவிற்கு இனவாதத்தைக் கக்கி மக்களை உசுப்பேத்தினாலும், தூண்டினாலும் அம் மக்கள் திடீர் உணர்ச்சி மேலீட்டால் வழங்குகின்ற வாக்குகள் இன்னொரு இனத்தை அழிப்பதற்கானதாக இராது. தம் இனத்தைப் பாதுகாக்கப்பதற்கான வாக்குகளாகவே அவை கருதப்படல் வேண்டும். அவ்வாறு ஓர் இனத்தைக் காப்பது என்பது, அந்த இனத்தின் – மக்களின் அடிப்படை உரிமைகள் முதற்கொண்டு அரசியல் உரிமைகள் வரையிலான ஏற்பாடுகளை பெறுவதாகவும், பேணிப் பாதுகாப்பதாவும் அமைதலே வேண்டும். இது, இன்னொரு இனத்தின் மீதான இனவாதமாக இருக்க முடியாது. இங்கு இனவாதமென்பது ஒரு சிலரது சுயலாபம் கருதிய பேசு பொருளாக மாத்திரமே கொள்ளப்படுகின்றதே அன்றி, அது செயற்படு பொருளல்ல. இதனை நன்கு உணர்ந்து கொள்கின்ற நிலையில், எமது மக்களின் உணர்வுப்பூர்வமான பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு எந்தவொரு தரப்பினரும் தடையாக இருக்கப் போவதில்லை என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதே நேரம், இத்தகைய குறுகிய இனவாதம் பேசித்தான் எமது மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்ற கொள்கை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய எம்மிடம் இல்லை. எனவே, எமது வெற்றியானது மனிதாபிமானத்தைக் கொண்டது என்பதையும், தோல்விகள் இனவாதத்தை நோக்கியது என்பதையும் தெரிவித்து விடைபெறுகின்றேன்.

Related posts: