திருமலையில் அபகரிக்கப்பட்டுவரும் தமிழ் மக்களின் வழிபாட்டிடங்களை விடுவிக்க நடவடிக்கை தேவை – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 7th, 2017

திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களது தொன்மைகளை வெளிப்படுத்தும் இடங்கள் ஆலயங்கள், புராதனச் சின்னங்கள், பாரம்பரியமான அடையாளங்கள், கல்வெட்டுகள் என்பன சிதைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வருவதாக அப்பகுதி மக்களாலும், பொது அமைப்புகளாலும் தொடர்ந்து முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்படி செயற்பாடுகள்   இந்த அரசிலும் தொல்பொருள் திணைக்களத்தினூடாக தொடர்வதாகவே எமது மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவி வருகின்றது.  இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக தமிழ் மக்கள் மத்தியில் இந்த அரசு பற்றிய நம்பிக்கையீனங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில,; எமது மக்களது இந்த நிலைப்பாடும், தொல் பொருள் திணைக்களத்தின் இவ்வாறான செயற்பாடுகளும் தொடருமானால், இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கம் ஏற்படுவதில் இடைவெளிகளே அதிகரிக்கும் என்பதை இங்கு நான் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள் –

ஓர் இனத்தின் பாரம்பரிய மத வழிபாட்டுத் தலங்கள், தொன்மைகள், பூர்வீக அடையாளங்கள் என்பன அழிக்கப்படுமானால், அது அந்த இனத்தையே அடியோடு அழிக்கின்றமைக்கு ஒப்பானதாகும். கடந்த கால யுத்த கசப்புணர்வுகளை மனதில் வைத்துக் கொண்டு இன ரீதியிலான பழிவாங்கல்கள் எங்கும், எதிலும் இடம்பெறுமானால், அது இந்த நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு உகந்ததாக அமையாது என்பதையே நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். கடந்த கால யுத்தமென்பது தொடர்ந்திருந்த தமிழ் – சிங்கள அரசியல் தலைமைகளின் தவறுகளாலேயே ஏற்பட்டிருந்தது. இனியும் அவ்வாறான தவறுகள் இடம்பெறுவதற்கு இந்த அரசு இடங்கொடுக்காது என்றே எமது மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தொல் பொருள் திணைக்களத்தினூடான இவ்வாறான செயற்பாடுகளின் முன்பாக எமது மக்கள் அந்த நம்பிக்கையை இழந்த நிலைக்கு ஆளாக்கப்படுவதற்கு இந்த அரசு காரணமாக அமைந்துவிடக் கூடாது எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், இவ்வாறான செயற்பாடுகள் திருகோணமலையில் மட்டுமல்ல, வடக்கு ௲ கிழக்கு மாகாணங்களில் பரவலாகவே மேற்கொள்ளப்பட்டு வருவதாக அன்றாடம் வெளிவருகின்ற ஊடகச் செய்திகள் உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. எனவே, இந்த விடயம் தொடர்பில் ஒரு தெளிவான நெறிமுறையை அமைப்பதற்கு தொல் பொருள் திணைக்களத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் கௌரவ கல்வி அமைச்சர் அவர்கள் முன்வர வேண்டியது அத்தியவசியமாகும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். அந்தவகையில், இத்தகைய செயற்பாடுகள் காரணமாக இனங்களுக்கிடையில் ஏற்படுகின்ற முரண்பாட்டு நிiமைகளை அகற்றும் வகையில்,ஷ

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தொல் பொருட்கள் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்கின்றபோது, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சார்ந்த தொல்பொருட்கள் தொடர்பிலான அறிவார்ந்த அதிகாரிகளையும் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கான ஆளணிப் பற்றாக்குறைகள் இருப்பின் அதனைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம்.

அந்தந்த இனங்கள் சார்ந்த தொன்மைகள் இனங்காணப்படுகின்ற நிலையில், அந்த இடங்களை அந்தந்தந்த இனங்கள் சார்ந்த கலாசார, மரபுரிமைகளுடன்கூடிய ஸ்தலங்களாக வடிவமைக்கப்பட நடவடிக்கை எடுக்குமாறும்,

1957ஆம் ஆண்டு முதல் உப்புவெளி கிராமோதய சபையால் பராமரிக்கப்பட்டு வந்துள்ள நிலையில், இந்த அரசினால் உப்புவெளி பிரதேச சபையிடம் ஒப்படைப்பதாக வாக்குறுதி வழங்கப்பட்ட கன்னியா வெந்நீரூற்று பிரதேசம் எப்போது ஒப்படைக்கப்படும் என்பதை அறியத் தருமாறும்,

இந்தப் பகுதியை அண்டியதாக அமையப் பெற்றிருந்த பழைவாய்ந்த பிள்ளையார் கோவில் இருந்த பகுதிக்குரிய காணியின் உரிமங்கள் சட்டரீதியாக தனியார் வசமுள்ள நிலையில், இக் கோவிலை மீள அமைப்பதில் வேறு ஏதேனும் தடைகள் உள்ளனவா என்றும், கோரிக்கை விடுத்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,

1938ஆம் ஆண்டளவில் அமைக்கப்பட்டு, 1980ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் திகதி இந்து சமய அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட செம்பீஸ்வரர் ஆலய புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கென புனர்வாழ்வு அதிகார சபை நிதி ஒதுக்கீட்டினையும் மேற்கொண்டுள்ள நிலையில், தொல் பொருள் திணைக்கள அதிகாரிகளின் தலையீடுகள் காரணமாக அதன் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது

மேற்படி கோவில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும், அங்கு இந்து மத பக்தர்கள் மத வழிபாடுகளில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கும் தடைகள் இருப்பின் அவற்றை அகற்றுவதற்கும், தடைகள் இல்லை எனில் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

 11.02.2016 அன்று நாடாளுமன்றத்தில் தனி நபர் பிரேரணை ஒன்றை முன்வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் ...
கறுப்பு ஜுலையின் காயங்கள் மக்களிடையே இன்னமும் மாறவில்லை - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
நீதித்துறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் - வலியுறுத்துகிறார் டக்ளஸ் எம்....