செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Saturday, May 20th, 2000

கௌரவ தவிசாளர் அவர்களே!

இப்போது என்னுடைய அமைச்சு சம்பந்தமான விடயங்கள் பற்றிய கருத்துக்களை இச்சபை உறுப்பினர்களுக்கும் இந்தச் சபையின் மூலம் வெளி  உலகக்குத் தெரிவிக்கவுள்ள நான் எனது பதிலுரையின் போது திரு.ஆனந்தசங்கரி அவர்களுடைய பொய்யான குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிப்பேன் என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

கௌரவ தவிசாளர் அவர்களே

எனது அமைச்சின் மீதான வரவு செலவுத் திட்;ட நிதி ஒதுக்கீடு தொடர் பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு எனது கருத்துக்களை முன்வைக்க வேண்டிய கடமைப்பாடு எனக்கு இருக்கிறது. எனது அமைச்சாகிய வடக்கின் அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் வடக்கு கிழக்குத் தமிழ் விவகாரங்கள் அமைச்சின் அமைப்புச் சம்பந்தமாகவும் பணிகள் பொறுப்புக்கள் கடமைகள் பற்றியும் சுருக்க மாக எடுத்துக் கூற விரும்புகின்றேன்.

இந்த அமைச்சானது புதிதாக வடிவமைக்கப்பட்டதாகும். அதாவது நான் இவ்வமைச்சுப் பொறுப்பை ஏற்ற போது ஏனைய அமைச்சுக்களைப் போல் நிர்வாக ஒழுங்கமைப்பு மற்றும் நிர்வாக இயந்திரங்களை அது ஏற்கனவே கொண்டிருக்கவில்லை. அசாதாரண சூழ்நிலைகளுக்கு முகம் கொடுத்து வாழும் சாதாரண மக்களுக்குச் சேவையாற்றும் பொறுப்பு.மோதல் நிலைமைக்குள் சிக்குண்டு சங்கடப்படும் மக்களுக்கு மத்தியில் எதிர்காலம் குறித்த நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் கடமை அதிகாரப் போட்டியினைக் குறிப்பாகக் கொண்டிருக்கும் சக்திகளின் அவதூறுப் பிரச்சாரங்களை எதிர்கொள்ளும் தேவை என்பவற்றுக்கு இவ்வமைச்சு முகங்கொடுத்து திடசித்தத்துடன் செயற்படுகின்றது. தமிழ் பேசும் மக்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்குபற்றுதலை அம்மக்களின் அங்கீகாரத் துடன் உறுதி செய்வதும் புதியதொரு அரசியல் பாதையை எமது மக்களுக்கு இனங்காட்டுவதும் எமது சிந்தனையில் நிறைந்துள்ள விடயங்களாகும். இவ்வகையில் தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக உரிமையை நிலைநாட்டும் கடமைப் பொறுப்பும் எமக்குண்டு.

எனது அமைச்சானது அபிவிருத்திப் பிரிவு தமிழ் அலுவல்கள் பிரிவு ஊடகப் பிரிவு மாவட்டப் புனர்வாழ்வு புனரமைப்புச்செயலகங்கள் மற்றும் அமைச்சரின் மாவட்ட அலுவலகங்கள் என்னும் கட்டமைப்புக் களைக் கொண்டுள்ளது. அத்துடன் வடக்கின் மீள் குடியேற்றப் புனரமைப்பு அதிகார சபை எனப்படும் RRN அமைப்பு பனம்பொருள் அபிவிருத்திச் சபை  இந்துசமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் என்பவற்றையும் அது உள்ளடக்கியிருக்கிறது. இவற்றை விட அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் – ஊபுளு – திணைக்களத்தையும் இவ் அமைச்சு விரைவில் பொறுபேற்றுச் செயற்படுத்தவிருக்கின்றது. மேலும் வடக்கின் பனைத்தொழில்துறை சார்ந்த அரசாங்கச் சொத்துக்களான பரந்தன் இரசாயன கம்பனி சீனோhர் நிறுவனத்தின் வடபகுதித் தொழிற்சாலைகள் மற்றும் சொத்துக்கள் வடபகுதியிலுள்ள உப்பளங்கள் ஒட்டிசுட்டான் ஓட்டுச் தொழிற்சாலை என்பன உமது அமைச்சுகுக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளன. இவற்றை மீள இயங்க வைக்கவும் நிர்வாகங்களை சீராக்கவும் வரையறுக்கப்பட்ட வட கடல் கம்பனி வரையறுக்கப்பட்ட வன்னி ஓட்டுக் கம்பனி வரையறுக்கப்பட்ட மாந்தை உப்புக் கம்பனி ஆகிய நிறுவனங்களை நாம் தோற்றுவித்துள்ளோம். எமது அமைச்சு யாழ். நூல் நிலையப் புனரமைப்புப் பணியையும் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை களையும் விரைவில் பொறுப்பேற்று அவற்றை மறுசீரமைத்து இயங்க வைக்கவுள்ளோம். எனது அமைச்சின் இந்த விடயப் பட்டியலைப் பரிசீலித்துப் பார்க்கும் எவரும் நாம் ஏற்றுள்ள பாரிய பொறுப்பின் தன்மையை உணர்வர்.

ஒரு காலத்தில் பிரதேசத்திற்கும் தேசத்திற்கும் வளம் சேர்த்த நிறுவனங்களை அழிவின் விளிம்புக்குச் சென்றுள்ள அன்றைய நிலையிலிருந்து மீட்க வேண்டியதன் அவசியத்தை எவராலும் புரிந்து கொள்ள முடியும். முன்னைய காலங்களில் இந்நிறுவனங்கள் ஈட்டிய இலாபத்தின காரணமாக தென்னிலங்கையில் தோற்றுவிக்கப்பட்ட கிளை  நிறுவனங்கள் இன்றும் வெற்றிகரமாகச் செயற்பட்டு வருகின்றன என்பது எண்ணிப் பார்க்கப்பட வேண்டியதாகும். இலாபம் ஈட்டி வந்த பல நிறுவனங்கள் இன்னும் தொழிலாளர்களைக் கூடப் போசிக்க முடியாத நிலையில் இருப்பதையும் இந்த நிறுவனங்களின் தொழிலாளர்கள் உற்பத்தியைக் கூட மேற்கொள்ள இயலாத கையறு நிலைமை இருப்பதையும் இன்று அவதானிக்க முடிகின்றது.

அழிவுப் பாதையிலிருந்து விலகி ஆக்கத்தை நோக்கிய திசையில் திசை மாற்றி செல்ல வேண்டிய பயணத்தின் முதல் படியிலேயே தற்போது எனது அமைச்சின் பணிகள் இருக்கின்றன. தொடரும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த நிலையிலும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட நிலையிலும் நிவாரங்களில் தங்கி வாழும் மக்களுக்கு தரமான உணவுப் பொருட்களைப் போதுமான அளவில் கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்த நாம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் வடபகுதிக்கான தரை வழிப்பாதையை திறக்க அரசியல் ரீதியில் முயற்சிகளை மேற்கொள்ளும் அதேவேளை வடபகுதிக்கான பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல்கள் போக்குவரத்தைச் சீராக்கவும் அவற்றிக்காக கட்டணங்களை குறைக்க வும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பாதுகாப்பு அமைச்சினால் போக்குவரத்து தொடர்பாக விதிக்கப்ட்டிருக்கும் தடைகளை ஆய்வு செய்து அநாவசியத் தடைகளை அகற்றுமாறு நாம் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கவுள்ளோம். யுத்தத்தினால் நலிவடைந்த மக்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்தையும் ஆரம்பித்துள்ளோம். வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளை அணிதிரட்டி ஊக்குவிப்புக் கொடுப்பனவுடன் தொழிற்பயிற்சி வழங்க அபிவிருத்தி வேலைகளில் ஈடுபடுத்தவுள்ளோம். இது தவிர இடம்பெயர்வுக்குள்ளான மக்களுக் கான வீடமைப்புத் திட்டங்கள் மாதிரிக்கிராமங்கள் போன்றவற்றை அமைக்கவும் கல்வி மேம்பாட்டை முன்னெடுக்கவும் ஏற்பாடு செய்து வருகின்றோம். இந்த வகையில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா குறிப்பிடத்தக்கது. இது தவிர தொலைபேசி மின்சார சுகாதார மருத்துவ வசதிகளை சீராக்கவும் விரிவாக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

நாட்டில் இயல்பு நிலையை மீண்டும் நிலை நாட்டிடவும் இனங்களுக் கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தி சமூக பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லவும் தமிழ் பேசும் மக்களின் சமத்துவ உரிமையையும் அவர்களது நலன்களையும் உறுதிப்படுத்தவும் பேணிக்காகவும் தமிழ் மொழியின் பயன்பாட்டை விரிவுபடுத்தவும் இந்து சமயத்தையும் தமிழ் கலாச்சாரத்தையும் பாதுகாத்து மேம்படுத் தவும் அவசியமான தகுந்த கொள்கைகள் நிகழ்ச்சித் திட்டங்கள் செயற்திட்டங்கள் மூலம் உகந்த நின்று நிலைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்குதல் என்பதுவுமே எமது அமைச்சுப் பொறுப்பேற்றபின் தூய் மையான நோக்கமாகும்.

முன்பு வட பிராந்திய புனர்வாழ்வு புனரமப்பு அபிவிருத்தி அமைச் சாகிய இயங்கிய நிறுவனத்தையும் முன்பு கலாசார பண்பாட்டு சமய அலுவல்கள் அமைச்சின் கீழ் செயற்பட இந்துசமய கலாசார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தையும் உள்வாங்கி எமது அமைச்சு 2000 அக்டோபர் 19ம் திகதியன்று ஸ்தாபிக்கப்பட்டது.எமது அமைச்சின் முக்கிய பொறுப்பாக இருப்பது. அபிவிருத்தியுடன் இணைந்த புனர்வாழ்வு புனரமைப்பு பணிகளே ஆகும். போர்ச் சூழலுக்கு இன்னமும் முகம் கொடுத்து வரும் வடமாகாணத்தின் எல்லா மாவட்டங்களிலும் புனரமப்புப் புனர்வாழ்வு நடவடிக்ககைள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன. அரசியலுரிமைக்கான போராட்டம் என்னும் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு யுத்தத்தை நடாத்தி, அழிவை நோக்கி செலுத்தப்படும் எமது மக்களின் அரசியல் பாதையை திசை திருப்பி ஆக்க பூர்வமான அபிவிருத்தி பணிகளில் ஈடுபட வழிகாட்டுவதன் மூலமாக, மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கையும் மாகாணத்தில் சுயாட்சிக்கான அதிகாரப் பகிர்வையும் கட்டிவளர்க்க முற்பட்டுளோம்.

இதுகாலவரையில் மாவட்டங்களில் புனர்வாழ்வு புனரமைப்புப் பணிகள் மாவட்ட அரசாங்க அதிபர்கள் குறிப்பிட்ட கருத்திட்டங்களை அந்தந்த மாவட்டத்திலுள்ள மத்திய மாகாண அரச திணைக்களங்களுக்கு பொறுப்பளித்து அவற்றின் ஊடாக செயற்திட்டங்களை நிறைவேற்றி வந்தனர். நான் இந்த அமைச்சுப் பொறுப்பை ஏற்ற பின்னர் இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அரசாங்க அதிபர்களின் அனுசரனையுடன் மாவட்ட புனாவாழ்வு ஒருங்கிணைப் புக் குழுக்கள் தற்போது அமைச்சின் செயற்படுத்த முகவராண்மைகளாக மாற்றப்பட்டு மாவட்ட புனர்வாழ்வு புனரமப்பு அதிகார சபையின் மாவட்ட பணியாட் தொகுதியின் உதவியைப் பெற்றுக் கொள்வதுடன் புனர்வாழ்வு. புனரமைப்புத் திட்டங்களின் உண்மைச் செயற்பாட்டிற் கும் பொறுப்பாக இருக்கும்.

இன வன்முறையினாலும் ஆயுத மோதல் நடவடிக்கைகளாலும் பயங்கர வாத செயற்பாடுகளாலும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள மக்கள் கௌரவத்துடனும் சுயமரியாதையுடனும் மீண்டும் தமது வாழ்க்கை யைத் தொடருவதற்கு ஏதுவாக இருப்பது என்பதுவே குறிக்கோளாகும்.அடிப்படை வசதிகளை வழங்குதல் மீளக் குடியமர்தல் வேறிடத்தில் அமர்தல் உற்பத்தி சமூக மற்றும் பொருளியல் அறைகள சார்ந்த சேதமுற்ற அழிவுள்ள சொத்துக்கள் மற்றும் உட்கட்டமைப்புக்களின் நிறைவேற்றத் திட்மிட்டுள்ளோம். இதன் மூலமாகப் பாதிப்புற்ற குடும் பங்களின் சமூக மேம்பாட்டிற்கு உகந்த பௌதீக பொருளாதார சமூக ரீதியான உறுதியான சூழலை உருவாக்குவது என்பதையே இலக்காக கொண்டுள்ளோம். இதற்கு மோதல் சூழ்நிலை நிலவும் பிரதேசங்களில் குறிப்பாக வடககு – கிழக்கில் இயல்பு நிலைமையை வழமைக்கு கொண்டு வருவது தேவiயானதாகும். எனவே பொது நிர்வாக அமைப்பைப் பலப்படுத்த வேண்டியது ஒரு முன் தேவையாகும். இதற்காக இப் பகுதியிலுள்ள அரசாங்கத் திணைக்களங்களில் காணப்படும் பதவி வெற்றிடங்களை விரைவில் நிரப்ப அமைச்சரவையின்  அங்கீகாரத்தை பெற்றுள்ள நாம் ஆளணிப் பற்றாக்குறையை உடனடியாகத் தீர்க்க நடவடிக்ககைளை மேற்கொண்டுள்ளோம். போர்ச் சூழல் நிலவும் பிரதேசத்தில் வாழும் மக்களின் மத்தியில் அரசாங்கத்தின் சேவைகள் சீராகக் சிடைக்கச் செய்வதன் மூலமாக அந்த மக்களின் நம்பிக்கையை நிலைநாட்ட முடியும்.

இடம்பெயர்ந்தவர்களைச் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துதல் அவர்களுக்குப் புனர்வாழ்வு அளித்தல் என்பன தொடர்பில் அமைச்சு கடைபிடிக்கும் கொள்ளையின் முக்கிய அம்சங்கள் பற்றி இங்கு குறிப்பிடுதல் பொருந்தும். இடம்பெயர்ந்த நிலையில் தற்போது வாழும் எவரும் அவர்களது சொந்த  விருப்பங்களுக்கு மாறாக எந்த இடத்திலும் வலுக்கட்டாயமாக குடியமர நிர்பந்திக்கப்படமாட்டாhகள் என்பதை இச்சபைக்கும் நாட்டு மக்களுக்கும் தெளிவாக எடுத்துரைக்கின்றேன். இடம்பெயர்ந்த நிலையில் வாழ்பவர்கள் மீளக்குடியமரும் பிரதேசங் கள் மீண்டும் மீண்டும் அனாத்தங்களைச் சந்திக்கும் ஆபத்து தவிர்க்கப்பட்டதாக இருக்க வேண்டும். மீளக் குடியமர்பவர்கள் தங்கள் பொருளாதார உள்ளீடுகளை கொண்ட வரவும் வெளிச் சந்தைகளுக்கு எடுத்துச் செல்லவும்  – கூடியதாக சுதந்திரமான நடமாட்டம் உறுதி செய்யப்பட வேண்டும். இதேவேளை பாதுகாப்பு நிலவரங்கள் காரணமாக சொந்த இடங்களுக்கு மீளக்குடியமருவதற்குச் செல்ல முடியாதவர்கள் தாம் வாழும் இடங்களில் தாம் வாழும் தரத்தின உயர்த்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

வடக்கின் மீள்குடியேற்ற புனரமைப்பு அதிகாரசபையானது 1996ம் ஆண்டு ஜூலை முதல் பணியாற்றி வருகின்றது. இதன் பணி யுத்தத்தி னால் பாதிக்கப்பட்ட பாதிக்கப்படுகின்ற வடக்கின் மாவட்டங்களான யாழ்ப்பாணம் வவுனியா கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு மாவட்டங்களில் மீளக்குடியமர்த்துகை இழப்;புக்கள் சேதங்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் அபிவிருத்தியுடன் இணைந்து புனர்வாழ்வு புனரமைப்புக்கான நிகழ்ச்சித் திட்டங்களை செயற்படுத்து வதும் கொடைதருநர் நிதிகளைத் திரட்டுதலுமாகும்.

இந்த அண்டில்

சமூக பொருளாதார இயல்பு வாழ்வை மீண்டும் அரம்பிக்க சொந்த இடங்களிலும் புதிதாக காணிகளைப் பெற்றம் குடியமர்தல்

மீளக்குடியமர்த்தப்பட்ட அல்லது வேறிடங்களில் குடியமர்த்தப் பட்ட பிரதேசங்களிலுள்ள மீள்ளகுடியிருப்பாளர்களுக்கு பொது வான வசதிகளை ஏற்படுத்துதல்.

பாதைகள் நீர்பாசன வேலைகள் பாடசாலைகள் மருத்துவமனைகள் மின்சார வசதிகள் சந்கைகள் சனசமூக நிலையங்கள் முதலியவற்றின் புனரமைப்புக்கு வழி செய்தல்.

அபிவிருத்திக்கான மேலதிக சமூக பொருளாதார உட்கட்ட மைப்பை உருவாக்குதல்.

வணக்கத் தலங்களை புனரமைத்தல்.

அரசாங்க நிர்வாகத்தை உறுதிப்படுத்த தேவையான நிறுவன ரீதியான அமைப்பை ஏற்படுத்தல்.

என்பவற்றுக்காக முன்னுரிமை கொடுத்துச் செயற்படத் திட்டமிடப் பட்டுள்ளது.

பனை அபிவிருத்திச் சபையானது 1978ம் ஆண்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் உருவாக்கப்ட்டது. கற்பகதரு எனப் போற்றப்படும் பனை மரங்கள் போர்ச் சூழலில் காரணமாக  பலத்த அழிவுகளைச் சந்தித்துள்ளன. பாதுகாப்பு கவசமாகவும் அவை பயன் படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் அழிவுகளைச் சந்தித்துள்ள பனை வளத்தை மீண்டும் பெருக்கவும் வளர்க்கவும் வேண்டியுள்ளது. கடந்த வருடம் 7 மில்லியன் ரூபாவாக இருந்த மூலதன செலவை நாம் அமைச்சுப் பொறுப்பேற்றதன் பின்பு 21 மில்லியன் ரூபாவாக உயர்த்தியுள்ளோம். இச்சபையின் முதலாவது தலைவர் எனது ஞானத் தந்தையாரான கே.சி.நித்தியானந்தா அவர்களே என்பதையும் இச் சபையின் முதாவது ஊழியர் நான் என்பதையும் நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளேன். பனை வளத்தைப் பெருக்குதல் பேணுதல் என்பவற்றை இலக்காக் கொண்டிருந்த இச்சபை யாழ்ப்பாணத்திலேயே அதன் தலைமை அலுவலகத்தை வைத்திருந்தது. பனம் பொருளைச் சந்தைப்படுத்தவும் திறைசேரி போன்றவற்றுடன் தொடர்பு கொள்ளவும் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் வவுனியா திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை புத்தளம் அம்பாந்தோட்டை பிரதேச காரியாலயங்களுடன் தொடர்பைப் பேணவும் கொழும்பில் ஒரு நகர அலுவலகம் திறக்கப்பட்டது. இதன் கடந்த காலச் செயற்பாடு பற்றிய விபரிப்புக்களை கௌரவ உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அறிக்கையின் மூலம் தெரிந்து கொண்டிருக்கக் கூடும். இந்த ஆண்டில் வினாகிரி உற்பத்தியை மேற்கொள்ளவும் பனை சாந்த உணவுப் பொருட்களின் உற்பத்தி விரிவாக்கப்படவும் மென்பான உற்பத்தியில் ஈடுபடவும் பனம் தும்பு உற்பத்தியில் ஈடுபடவும், பனை சார்ந்த உற்பத்தி பொருட்களின் தரத்தைச் சீராகவும், பனை சார்ந்த சுய தொழில் வாய்ப்புக்களை விரிவாக்கவும் பனங் கள்ளுக்கு மேலதிக சந்தை வாய்ப்பைப் பெறவும் ஏனைய பனை உற்பத்தி பொருட்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு சந்தை வாய்ப்புக்களை விரிவாக்கவும் திட்ட மிட்டுள்ளோம்.

பனம்பொருள் அபிவிருத்திச் சபையின் முயற்சியினால் உருவாக்கப் பட்ட வடிசாலை ஒன்று வடமராட்சியின் திக்கம் என்னும் இடத்தில் உள்ளது. இவ்வடிசாலையானது வடபகுதயில் நிலவிய விஷேட அரசியல் சூழ்நிலை காரணமாக தெங்கு பனம் பொருள் உற்பத்தி விற்னைக் கூட்டுறவுச் சங்கங்களின் கொத்தணிக்கக் கைமாறியது.கடந்த காலங்களில் இவ்வடிசாலையின் முன்னேற்றத்திற்காக வரிச் சலுகைகள் உட்பட பல்வேறு வகையான உதவிகளை அனுசரணை யாக வழங்கியுள்ளோம்.கடந்த இரண்டரை வருடங்களில் 4 கோடியே 57 லட்சம் ரூபாவை வரிச்சலுகையாக திக்கம் வடிசாலையின் அபிவிருத்திக்குப் பெற்றுக் கொடுத்திருந்தோம். ஆனாலும் அந்நிதியை அபிவிருத்திக்குப் பயன்படுத்தாததால் நாம் அமைச்சுப் பொறுப்பேற்ற தன் பின்பு அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலம் அவ்வடிசாலையை மீளப்பெற்றோம். பனை வளத்தில் தங்கியுள்ள தொழிலாளர்களின் நலன்களைப் பேணும் வகையில் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றோம். ஆனால் மக்களின் நலன்களுக்கெதிரான சக்திகிளின் தொடர்ச்சியான மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் பொய்யான பிரச்சாரங்களும் இவ்வடிசாலைக்கு இருந்து வருகின்றன.என்பதைச் சுட்டிக்காட்டுகின்றேன்.

வடக்கு மாகாணத்தின் தொழிற்சாலைகள் இப்போது பலத்த சீரழிவுக்கு உட்பட்டுள்ளன. என்பது இரகசியமானது அல்ல. இத்தொழிற்சாலைகளில் பணியாற்றிய தொழிலாளர்களால் உற்பத்திகளை மேற்கொள்ள முடியாத நிலை நீடிக்கிறது. இருந்த போதும், இவற்றின் தொழிலாளர்களைத் தொடர்ந்து பராமரிக்கின்ற பொறுப்பை அமைச்சுக் கைவிடப் போவதில்லை. பரந்தன் இரசாயன கம்பனி காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை உப்பளங்கள் என்பன இவற்றுள் குறிப்பிடத்தக்கவையாகும். பரந்தன் இரசாயன தொழிற்சாலை தற்போது வரையறுக்கப்பட்ட பரந்தன் இராசயனக் கம்பனி என்ற பெயரில் இயங்கி வருகின்றது. ஒரு கால கட்டத்தில் அங்கு சுமார் 500 தொழிலாளர்கள் பணியாற்றினார்.ஆனால் தற்போது 31 பேரே அங்கு பணியாற்றுகின்றனர். மேலும் தற்போது இடம்பெற்று வரும் இறக்குமதி வியாபாரத்தை தொடர்ந்து மேற்கொள்வும் இங்குள்ள தொழிலாளர்களைப் பயன்படுத்திக் கம்பனி நடவடிக்கைகளை பன்முகப் படுத்தி விரிவாக்கவும் நிபுணர்களைப் பயன்படுத்தி தொழிற்சாலையை நவீன தொழிற்சாலையாய்ச் செயற்பட வைக்கவும் எண்ணம் கொண்டுள்ளோம். யாழில் அரச தென்னந் தோட்டங்களை பொறுப்பேற்று அவற்றை மறுசீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். யாழ் – மாவட்டத்திற்கான சத்துணவுத்திட்டம் ஒன்றையும் இந்தத் தொழிற்சாலையூடாகச் செயற்படுத்தவுள்ளோம்.

1968ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் நோர்வே அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட சீநோர் நிறுவனத்தின் வடபகுதித் தொழிற்சாலைகளையும்  சொத்துக்களையும் கொண்டு உருவாக்கப் பட்ட புதிய கம்பனி வரையறுக்கப்பட்ட வடகடல் கம்பனி என்ற பெயரில் செயற்பட முனைந்துள்ளது. மீன்பிடி வலை மீன்பிடிப்படகு கள் ஐஸ்கட்டிகள் மீன்உணவு வகைகள் என்பவற்றை உற்பத்தி செய்யவும் பதப்படுத்தவும் போதிய உள்நாட்டு வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புக்களைப் பெறவும் அக்கம்பனியின் தொழிற்பாடுகளைப் படிப் படியாக விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது.

20 வருடங்களாக இயங்கி வந்ததும் கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டுக் கிடப்பதுமான ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இப்போது எனது அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் ஒட்டுசுட்டான் பிரதேசம் பாதுகாப்பான பகுதிக்குள் இல்லை என்பதனால் இத்தொழிற்சாலையின் பௌதீக வளங்களைப் பொறுப்பேற்க முடியாத நிலை உள்ளது என்பது இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

ஆனையிறவு குறிஞ்சாத்தீவு செம்மணி மாந்தைப் பிரதேசத்தில் உப்பு விளைவிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை உப்புக் கூட்டுத்தாப னம் 1999ம் ஆண்டில் மறுசீரமைக்கப்பட்டு வரையறுக்கப்பட்ட உப்புக் கம்பனி எனப் பெயர் மாற்றம் பெற்றது. இவ்வாண்டில் இருந்து வரையறுக்கப்ட்ட மாந்தை உப்புக் கம்பனி என்ற பெயரில் செயற்பட வைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனையிறவு குறிஞ்சாத்தீவு உப்பளங்களில் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 300க்கும் அதிகமான தொழிலாளர்கள் தற்போது கடமையில் ஈடுபடவும் உற்பத்தியைப் பெருக்கவும் ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

வடக்கின் பாரிய தொழிற்சாலையான சீமெந்து தொழிற்சாலைகளின் சுமார் ஆயிரத்து அறுநூறுக்கும் அதிகமான தொழிலாளர்கள் இன்று நிர்க்கதி நிலையில் உள்ளனர். அச்சுவேலியில் உள்ள கைத்தொழில் பேட்டையை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை செய்து வருகின்றோம். அத்துடன் மேலும் பல துறைகளை மேம்படுத்தவும் எண்ணியுள்ளோம். அவ்வகையில் இளைஞர்களுக்கான தொழில்திறன் அபிவிருத்திப் பயிற்சித் திட்டத்தை  முன்னெடுத்துச் செல்வதோடு தகவல் தொழில்நுட்பப் பயிற்சியையும் விரிவாக்குதல் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து வருமான அதிகரிப்புக்கான சிறிய தொழிற்றிட்டங்களை மேம்படுத்தல் விவசாய உள்ளீடுகளைக் கொண்டு செல்வதில்  உள்ள தடை மற்றும் மீன்பிடிப்பதிலுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பாகப் பாதுகாப்புத் தரப்பினருடனும் சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்களுடனும் மற்றும் பொதுமக்களுடனும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்துவதன் மூலம் இக்கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு அல்லது குறைப்பதற்கு முயற்சித்தல் வடபகுதியின் உற்பத்திப் பொருள்களைத் தென்பகுதிக்கும் வெளிநாட்டுச் சந்தைக்கும் கொண்டு செல்லும் வகையில் கடல்வழி ஆகாய வழி தரைவழிப் போக்குவரத்தைச் சீராக்க முயற்சித்தல் அத்துடன் குளிர் பதனிடும் நிலையங்கள் மூலமாக சந்தை வாய்ப்புக்களை அதிகரித்தல் விவசாயம் கால்நடை உற்பத்தி போன்றவற்றுக்கான உள்ளீடுகள் உரிய காலத்தில் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுத்தல் மற்றும் திணைக்களம் ஊடான விரிவாக்கச் சேவையை வலுப்படுத்தல் என்பவற்றகை; குறிப்பிடலாம்.

அடுத்ததாக, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் பற்றிய விடயம் தற்போது அந்தத் திணைக்களம் எனது அமைச்சின் கீழ் உள்ளது.கடந்த ஆண்டில் குறித்த விடயத்திற்கான மூலதனச் செலவு ரூபா 2.85 மில்லியனாக இருந்தது. எமது அமைச்சு அத்திணைக்களத்தைப் பொறுப்பேற்ற பின்னர் அதாவது அந்த வருடத்தில் அது 12மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திணைக்களத்தின் வேலைத் திட்டங்களாவன அறநெறிப் பாடசாலைகளை நிர்வகித்தல் அபிவிருத்தி செய்தல் மனித விழுமியங்களை மேம்படுத்தல் இந்து சமய மற்றும் தமிழ் கலாசாரம் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளல் குரு குலங்கள் ஸ்தாபித்தல் தமிழ்மொழி வளர்ச்சிக்க உதவுதல் இந்துக்களின் கலை கலாசாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல் கர்நாடக இசை மற்றும் பரத நாட்டியக் கலையை மேம்படுத்த நடவடிக்கை செய்தல் ஆலயங்களின் புனரமைப்பிற்கும் மேம்பாட்டிற்கும் உதவுவதல் போன்ற பணிகளை முன்னெடுத்தல் என்பனவாகும்.

இந்து சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்த மட்டக்களப்பு விபுலானந்த இசை நடனக் கல்லூரி கிழக்குப் பல்கலைகழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளமையை மகிழ்வுடன் இங்க தெரிவிக்கும் அதே வேளை தொடர்ந்தும் அக்கல்லூரியின் வளர்ச்சிக்க உறுதுணையாக இருப்போம். என்பதையும் இங்கு கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

இதற்கு முன்னர் நாங்கள் எத்தகைய திட்டங்களைத் தீட்டினாலும் கூட, பாதுகாப்பு நிலைமைகள் உத்தரவாதப்படுத்தப்படும் போதுதான் அத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. பாதுகாப்பு உத்தரவா தம் என்பது அரசியல் உறுதிப்பாட்டில் தங்கியிருக்கின்றது என்பதை இச்சபையின் கௌரவ உறுப்பினர்கள் உணர்வாளர்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்.

ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வை நிலைநாட்டுவதே தமிழ் பேசும் மக்களின் அபிலாசையும். தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கு நிரந்தரமானதும் நீடித்து நிலைக்கக்கூடியதுமான தீர்வொன்றை வடிவமைக்கவும் அதனைத் திடசங்கற்பத்துடன் அமுல்படுத்தவும் துணிச்சலுடன் முன்வர வேண்டி யுள்ளது. இதற்கான பாதையைத் திறந்து பயணத்தை தொடங்க வேண்டியதும் அவசியமானதாகும். காலம் எவருக்காகவும் காத்திருக்கப் போவதில்லை. எமது மக்களுக்காக நாம் ஏற்றுக் கொண்டுள்ள இப்பாரிய கடமையையும் அவசியத்திற்குத் தடையாக கபடத்தனமான அரசியல் உள்நோக்கங்களுடன் கூடிய மறைமுக வேலைத்திட்டங்களுக்காக தாமதப்படுத்தும் தந்திரோபாயங்களை கைக்கொள்ளும் சக்திகளின் சதி வலைகளுக்குள் சிக்கிக் கொள்வதைத் தவிர்த்து ஆக்கபூர்வமான முறையில் செயற்படுவோம்.

இதுவரைகால எமது அரசியல் வரலாற்றில் ஈ.பி.டி.பி யினராகிய நாம் இன்னொரு புதிய அத்தியாயத்தில் கால்பதித்து நிற்கின்றோம்.ஆரம்பத்தில் ஆயுதப் போராளிகளாகவே  நாம் மக்களிடம் அறிமுகமா யிருந்தோம். அதன்பின் போராட்ட வடிவில் மாற்றமடைய வேண்டிய வரலாற்று நிர்பந்தத்தினால் சனநாயகப் பாதையில் மக்களிடம்; வந்தவர்கள் நாம். இன்று மக்களின் சார்பாக ஆட்சியதிகாரத்தில் பங்கெடுத்து அமைச்சுப் பொறுப்பெடுத்து மக்கள்முன் நிற்கின்றோம்.(இடையிடு) தனிநபருக்கான அந்தஸ்து கருதியோ மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பியோ நான் இந்த அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டவனல்ல. எம்மக்கள் மீது திணிக்கப்படுகின்ற அனைத்து  ஆதிக்கங்களையும் உடைத்தெறிந்து மக்களால் மக்களுக்கான அதி காரத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கம். அதற்கான ஓர் அடியெடுப் பாகவே அமைச்சுப் பொறுப்பு என்ற படிக்கட்டில் நான் கால்பதித்து வைத்திருக்கின்றேன். இதிலிருந்துதான் எமது இலக்கு நோக்கி நாம் உயரவேண்டியிருக்கிறது.

தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்யக் கூடிய அரசியல் ரீதியான அதிகார அலகொன்று வடக்கு – கிழக்கில் நிறுவப்பட வேண்டும். இதை ஆளுமைமிக்கதாக வளர்த்தெடுக்கவும் பாதுகாக்கவும் மத்தியில் அரசில் பங்கெடுக்க வேண்டும். இவை இரண்டும் இருவேறாகப் பிரிக்கப்படமுடியாதவை. இந்த நிலைப்பாட்டி லிருந்துதான் கௌரவமான ஓர் அரசியல் தீர்வின் அத்திவாரமாக அதன் முன்னேற்பாடாக நான் இந்த அமைச்சுப் பொறுப்பை ஏற்கவேண்டிய நிலை.

எமது தாயக மண்ணில் நிரந்தரான சமாதானமும் எம்மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வும் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. இதுவரை கிடைத்துள்ள  சந்தர்ப்பத்தை நழுவவிட்டு நாம் காத்திருப்பதென்பது எம்மக்களுக்கு நான் செய்யும் மாபெரும் அரசியல் தவறாகவே நான் கருதுகின்றேன். வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுக்கான விவகாரங்களை கவனிப்பதற்கான அமைச்சுப் பொறுப்பும் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சுப் பொறுப்பும் எமக்கு கிடைத்திருப்பது ஓர் ஆரோக்கியமான நிகழ்வென்றே நான் கருதுகின்றேன். கடந்த காலங்களில் இதுபோன்ற விமோசனம் மிக்க ஏற்பாடுகள் எதுவும் கிடைத்திருக்கவில்லை. இதை மக்களின் தேவைக்காகவும் தேசத்தின் எதிர்காலத்தை நோக்கிய நகர்வுக்காகவும் நாம் பயன்படுத்தியே தீரவேண்டியது எமது வரலாற்றுக் கடமை.

நாம் எதைச் செய்கின்றோமோ அதை எதிர்பார்பதென்தே சிலரது கொள்கையாகிவிட்டது. மக்களின் நலன்களுக்காக நாம் எடுத்து வருகின்ற தீர்மானங்களையும் முடிவுகளையும் எதிர்ப்பதன் மூலம் தங்களது சொந்த அரசியல் நலன்களையே அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். எட்டி எட்டிப்பார்த்தார்கள். எட்டவில்லை. இப்போது கட்டிவிட்டிருக்கிறார்கள்  – கட்டுக்கதையாக  “சீச்சீ! இந்தப் பழம் புளிக்கும் இதற்காகவா நாம் புறப்பட்டோம்?” என்று மக்களை மந்தைகளாக நினைத்து அறிக்கைகளையும் விடுத்துக் கொண்டிருக் கிறார்கள். மக்கள் இவர்களை நம்பத் தயாரில்லை என்பதை நிரூபித்த வருகிறார்கள். (இடையீடு)

“இனியும் நாம் தொடர விரும்பவில்லை.

திசை வழி மாறிய பயணத்தின் முடிவில்

வெறும் பூச்சியங்களைத் தேடி!…”

இந்தக் கவிதை வரிதான் எமது புதிய அரசியல் வியூகத்தின் கருப்பொருள். அழிவுகளையும் இழப்புக்களையும் அறிக்ககைளால் மட்டும் தடுத்து நிறுத்திவிடமுடியாது. அனுபவங்களிலிருந்து தான் புதிய தத்துவங்களும் பாடங்களும் பிறக்கின்றன. ஆகவே தான் எமது அரசியல் வழிமுறையும் புதிதாகப் புடம்போட்டு எடுக்கப்பட்;டுள்ளது.

மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருப்பதனால் சுட்டுச் சரிக்கப்படும் கோர நிகழ்வுகள் ஒருபுரம்! ஆமைச்சுப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதால் நாட்டின் இறைமையைப் பறித்தவர்கள் என்ற இனவாதக் கூச்சல் மறுபுறம்! போட்டி அரசியலுக்காகப் பிரசாரங்களை எமக்கெதிராக கட்டவீழ்த்து விடும் போலி அரசியல் தடைகள் தனங்கள் மற்றொருபுறமாய் எமக்கெதிரேயுள்ள தடைகள் அதிகம்.தடைக்கற்களையெல்லாம் படிக்கற்களாக மாற்றி, எமது மக்களின் விடுதலையை நோக்கி நாம் துணிச்சலுடன் தொடர்ந்தும் முன்னேறுவோம்!.

“இடது கையைக் கடித்துக் கொண்டு வலது கையால் போராடுவோம்” என்ற ஒரு கவிஞன் சொன்னான். சொல்வது சுலபம்! அனுபவிப்பது கடினம்! அந்த நிலை எம்மக்களுக்கு ஏற்படுமாயின் அதைத் தடுத்து சோற்றுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் நாம் சனநாயக வழிநின்று தொடர்ந்து முன்னேறுவோம்.! தேசத்திற்காக தியாகங்களை ஏற்போம்! என்றும் நாம் மக்களின் நண்பர்கள்.

நன்றி வணக்கம்.

 20 மே 2000

Related posts:

தோழர் பிடல் கஸ்ரோ என்ற வல்லமையின் வரலாறு எம்மிடம் இருந்து விடைபெற்றுச் சென்று விட்டது - நாடாளுமன்றில...
வடக்கு - கிழக்கில் தமிழ் மொழிமூலமான அரச பணியாளர்களே நியமிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவ...
அரசியல் கைதிகள் விடுதலையில் எவரும் அரசியல் இலாபம் தேட வேண்டாம் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்ப...

வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கைகள் தொடர்பில் எமது மக்களுக்கு தெளிவுற அறிவுறுத்த வேண்...
மக்களின்தேவைகளை நிறை வேற்று வதற்காகவே நாம் மத்திய அரசுகளுடன் இணக்க அரசியலில் ஈடுபட்டோம்: சுய நலத்த...
காலச் சூழ்நிலையிலிருந்து நாடு மீட்சிபெறும் வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு அமைந்துள்ளது – அமைச்சர...