அதிக வருமானம் ஈட்டும் துறையாக தபால் துறையை மாற்றியமைக்க வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Thursday, September 6th, 2018

கடந்த ஜூன் மாதம் தபால் பணியாளர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் மேற்படி பணிப் பகிஸ்கரிப்பால் மூன்று நாட்களில் மாத்திரம் 500 மில்லியன் ரூபாவிற்கு மேல் நட்டமேற்பட்டுள்ளதாக தபால் சேவைகள் அமைச்சின் செயலாளர் கூறியிருந்தார். தபால் திணைக்களத்தின் நாளாந்த வருமானம் சுமார் 150 முதல் 180 மில்லியன் ரூபா என்றும் அவர் தெரிவித்திருந்தார். கடுகதி தபால் சேவை மூலமாக கடந்த ஆண்டு 90 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் இத்துறையினை மேலும் வருமானம் ஈட்டும் துறையாக ஏன் மாற்றியமைக்க முடியாது? எனக் கேட்க விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அஞ்சல் அலுவலக கட்டளைச் சட்டத்தின் கீழான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் –

இன்றைய தினம் தபால் அலுவலக கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பில் எனது கருத்துக்களையும் பதிவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அந்த வகையில், 1798ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, தற்போதைக்கு 220 வருடங்களுக்கான வரலாற்றைப் பதிவு செய்துள்ள இலங்கை தபால் சேவையானது, இன்று இந்த நாட்டில் ஏனைய அரச துறைகளைப் போல் ஊழியர்களது போராட்டங்களுக்கு முகங் கொடுத்து வருகின்ற ஒரு நிறுவனமாக மாறிவிட்டுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும்.
இந்த நாட்டில் தபால் துறையினை நம்பி சுமார் 27 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர் எனத் தெரிய வருகின்றது. அண்மையில் தபால் பணியாளர்கள் மேற்கொண்டிருந்த பணிப் பகிஸ்கரிப்பின்போது, 11 நாட்களில் சுமார் 2 இலட்சம் கடிதங்கள், பொதிகள் விநியோகிக்கப்படாமல், தேங்கிக் கிடந்ததாகக் கூறப்படுவதிலிருந்து இந்நாட்டு தபால் சேவையின் அவசியமானது நன்கு புலப்படுகின்றது என்றே கூற வேண்டும்.
அதே நேரம், இங்கு இன்னுமொரு விடயத்தினையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, 2011ஆம் ஆண்டு தபால் துறை பணியாளர்களது பணிப் பகிஸ்கரிப்பொன்று இடம்பெற்றிருந்த நிலையில், சுமார் ஒரு வார காலத்துக்குள், சுமார் ஒன்றரை மில்லியன் கடிதங்கள், பொதிகள் விநியோகிக்கப்படாமல் தேங்கிக் கிடந்ததாகக் கூறப்பட்டது.
அன்றிலிருந்து இன்று வரையிலான 7 வருட காலத்திற்குள் சுமார் 13 இலட்சம் கடிதங்கள், பொதிகள் விநியோகத்தை அரச தபால் சேவைத் துறை இழந்துள்ளது. தனியார்த்துறைகள் இத்துறையில் வளர்ச்சி பெற்றமை மற்றும் நவீன தொலைத் தொடர்பு சாதனங்களின் தீவிர வளர்ச்சி, அவை தொடர்பிலான மக்களின் ஈர்ப்பு என்பன இதற்குக் காரணமாகலாம். இந்த நிலையில், அஞ்சல் திணைக்களத்திற்கு சேவைகளை வழங்குவதில் நட்டமேற்படுவது புதுமையானதொரு விடயமல்ல. இதனை ஈடு செய்து கொள்ளும் முகமாக கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 07ஆம் திகதி இறுதியாக அஞ்சல் கட்டணம் திருத்தப்பட்டதன் பின்னர், சரியாக நான்கு ஆண்டுகள் கழிந்த நிலையில், 2018ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 07ஆம் திகதி இந்த புதிய கட்டண திருத்தம் கொண்டுவரப்பட்டு, பின்னர் பிற்போடப்பட்ட நிலையில், இன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
இலங்கைக்குப் பின்னரான காலத்தில் தபால் சேவையினை ஆரம்பித்துள்ள அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் தபால் துறையானது, காலத்திற்கேற்ப மாற்றங்களுடன் இன்றும் தன்னிகரில்லா நிறுவனங்களாக செயற்பட்டு வருகின்றன.
‘ரெலிகிராப்’ சேவை சொரூபத்தைக் கொண்டதாக 1856ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட தபால் சேவையானது, 1871களில் பண பரிமாற்று சேவையினையும் ஆரம்பித்து, இன்று உலகளாவிய ரீதியில் பிரபலம் பெற்ற ‘வெஸ்டர்ன் யூனியன்’ நாமம் கொண்டு, பலத்துடன் செயற்பட்டு வருகின்றது.
1871ஆம் ஆண்டு ஜப்பானில் ஆரம்பிக்கப்பட்ட தபால் சேவையானது, 1949களில் தபால், தொலைத் தொடர்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டு, தபால் காப்புறுதி பிரிவினையும் உள்ளடக்கி, பின்னர் வங்கிச் சேவையினையும் உள்ளடக்கி, இன்று அந்நாட்டு மக்களிடையே மிகவும் நெருக்கமான சேவை வழங்கும் நிறுவனமாக செயற்பட்டு வருகின்றது.
இலங்கை தபால் சேவையினைப் பொறுத்த வரையில் நிலைமை தலைகீழாகவே மாறிவிட்டுள்ளது. ஆரம்பத்தில் படிப்படியாக தபால் துறையுடன் இணைந்திருந்த பிற சேவைகள் அனைத்தும் அதிலிருந்து அகற்றப்பட்டு, இன்று தபாலுடன் மாத்திரமே அது தனித்துப் போய் நிற்கின்ற நிலையே ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், தபால் சேவையுடன் இணைந்திருந்த தந்திச் சேவை பிரித்தெடுக்கப்பட்டது. தபால், தொலைத் தொடர்புகள் அமைச்சாக செயற்பட்டு வந்த அமைச்சிலிருந்த தொலைத் தொடர்பு பிரித்தெடுக்கப்பட்டது. சேமிப்பு பிரிவு தேசிய சேமிப்பு வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது. முகவர் தபால் நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஊழியர் பற்றாக்குறைகளை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், இன்று, தபால் திணைக்களமாக இருக்கின்றதும் நாளை தனியார்மயப் படுத்தப்பட்டு விடுமோ என்ற அச்சம் அங்கு பணியாற்றுகின்ற பணியாளர்களிடையே ஏற்படும் அளவிற்கு, இன்று அத்துறையானது கைவிடப்பட்டு வருவதாகவே தெரிய வருகின்றது. இந்த நிலைமையானது 1998ஆம் ஆண்டு முதல் இருந்து வருகின்றது.
இலங்கை தபால் துறை வரலாற்றின் ஆரம்ப காலங்களில் நகரங்களை மையப்படுத்தியதாக அமைக்கப்பட்டுள்ள கொழும்பு, காலி, நுவரெலியா மற்றும் கண்டி நகரங்களில் காணப்படுகின்ற தபால் திணைக்களத்திற்குரிய கட்டிடங்கள் எமது நாட்டின் வரலாற்று ஆவணங்களாக இன்றும் திகழ்கின்றன. மேலும் இவை அமையப்பெற்றுள்ள இடங்களைப் பொறுத்து அதிக பெறுமதியான காணிகளைக் கொண்டவையாகும்.
இத்தகைய கட்டிடங்கள் அடங்கிய காணிகளை ஹோட்டல் துறைக்கென விற்பதற்கு தயார் நிலை இருப்பதாக அறிய முடிகின்றது. வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் குறிப்பாக – யாழ்ப்பாணத்தில் வாடகைக் கட்டிடங்களிலேயே பல தபாலகங்கள் – உப தபாலகங்கள் செயற்பட்டு வருகின்றன. இந்த நிலை நாட்டில் மேலும் இருக்கக்கூடும்.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், குறிப்பாக, யாழ் மாட்டத்தில் பல தபாலகங்கள், உப தபாலகங்களுக்கு காணிகள் இருக்கின்ற நிலையில, கட்டிடங்களை அமைத்துக் கொள்வதற்கான நி;தி ஏற்பாடுகள் இன்மை காணப்படுவதாகத் தெரிய வருகின்றது. காங்கேசன்துறை, பருத்தித்துறை, அச்சுவேலி, சங்கானை, பண்டத்தரிப்பு, வட்டுக் கோட்டை, சுன்னாகம், வவுனியா மாட்டத்தில் செட்டிக்குளம், மன்னார் மாவட்டத்தில் எருக்கலம்பிட்டி, சிலாவத்துறை மற்றும் முள்ளியவளை போன்ற இடங்களில் இத்தகைய பிரச்சினைகளைக் காணக்கூடியதாக இருப்பதால், கௌரவ அமைச்சர் அவர்கள் இவ்விடயம் தொடர்பில் உரிய அவதானங்களைச் செலுத்தி, கட்டிடங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
அதேநேரம், கொழும்பு ஜனாதிபதி மாளிகை அருகிலுள்ள தபால் திணைக்களத்திற்கு உரிய பழைமையான கட்டிடமானது கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக தேசிய பாதுகாப்புப் பிரிவினால் சுவீகரிக்கப்பட்ட நிலையில், இதுவரையில் அக் கட்டிடம் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா? எனக் கேட்க விரும்புகின்றேன்.
மேற்படி பழைய கட்டிடம் தபால் திணைக்களத்திற்கு கிடைக்காத நிலையில், 2000ஆம் ஆண்டு முதல் மாதாந்தம் சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வாடகையிலேயே கொழும்பு, பிரிஸ்டல் வீதியில் மேற்படித் திணைக்களம் தனது பணிகளை ஆற்றி வருவதாகத் தெரிய வருகின்றது.
இந்த நிலையில், மேற்படி ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் அமைந்துள்ள, தபால் திணைக்களத்திற்கு உரிய பழைய கட்டிடத்தையும் ஹோட்டல் துறைக்கு விற்பதற்கு எண்ணமிருப்பதாகக் கூறப்படுவதில் உண்மை உண்டா? எனக் கேட்க விரும்புகின்றேன்.
தபால் திணைக்களத்தின் இத்தகைய செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில், இருக்கின்ற வளங்களை சரியாகப் பயன்படுத்தியும், மேலும் நவீன கேள்விகளுக்கு ஏற்ப தபால் துறையை மாற்றியமைத்தும் செயற்பட்டால், இத்துறையானது நட்டமேற்பட வாய்ப்பில்லை என்றே கருதுகின்றேன்.
கடந்த ஜூன் மாதம் தபால் பணியாளர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், மேற்படி பணிப் பகிஸ்கரிப்பால் மூன்று நாட்களில் மாத்திரம் 500 மில்லியன் ரூபாவிற்கு மேல் நட்டமேற்பட்டுள்ளதாக தபால் சேவைகள் அமைச்சின் செயலாளர் கூறியிருந்தார். தபால் திணைக்களத்தின் நாளாந்த வருமானம் சுமார் 150 முதல் 180 மில்லியன் ரூபா என்றும் அவர் தெரிவித்திருந்தார். கடுகதி தபால் சேவை மூலமாக கடந்த ஆண்டு 90 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் இத்துறையினை மேலும் வருமானம் ஈட்டும் துறையாக ஏன் மாற்றியமைக்க முடியாது? எனக் கேட்க விரும்புகின்றேன்.
2006ஆம் ஆண்டின் சேவை வழங்கும் திணைக்களத்திற்கென வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குளறுபடிகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. பதில் தபாலதிபர்களுக்கான நிரந்தர நியமனங்கள் தொடர்பில் கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. இவற்றைத் தீர்ப்பதில் இருக்கின்ற தடைகள் என்ன? என்பது குறித்து தபால் சேவைகள் அமைச்சர் அவர்கள் இங்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
அண்மையில் நடந்திருந்த தபால் பணியாளர்களது பணிப் பகிஸ்கரிப்பு காரணமாக வெளிநாட்டு தபால் பொதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேங்கிக் கிடந்ததாகக் கூறப்படுகின்றது. இதன் காரணமாக சர்வதேச தபால் சங்கப் பட்டியலில் இருந்து இலங்கை தபால் சேவையானது நீக்கப்படக்கூடிய நிலைமை ஏற்படக்கூடும் என்றும் கூறப்பட்டது. எனவே, உரிய ஏற்பாடுகளை எந்த விடயங்கள் சார்ந்தும் உரிய காலத்திற்குள் எடுக்காமல், சர்வதேச ரீதியிலும் அபகீர்த்திகளைத் தேடிக் கொள்வதே இந்த நாட்டுக்கு வழமையாகி விட்டது என்றே கருத வேண்டியிருக்கின்றது.
அதே நேரம், மீள்குடியேற்றப் பகுதிகளில் ஏற்கனவே இருந்த உப தபாலகங்கள் மீள செயற்படுத்தப்பட வேண்டியத் தேவைகளும், புதிதாக உப தபாலகங்கள் நிறுவப்பட வேண்டியத் தேவைகளும் உள்ளன.
அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில், பல்லவராயன்கட்டு மற்றும் முகமாலை உப தபாலகங்கள் இன்னமும் மீள செயற்படுத்தப்படாத நிலைமைகள் காணப்படுகின்றன. முகமாலை உப தபாலகமானது 2009ஆம் ஆண்டு யுத்த சூழ்நிலை காரணமாக செயற்பாடுகளை இழந்துள்ள நிலையில், இதுவரையில் மீள செயற்படுத்தாத காரணத்தினால் இங்குள்ள மக்கள் யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள் நோக்கிச் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், யாழ் மாட்டத்திலும், மன்னார் மாட்டத்திலும் ஏற்கனவே செயற்பட்டிருந்த உப தபாலகங்கள் சில இதுவரையில் மீளத் திறக்கப்படாதுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் புதுமுறிப்பு, மாயவனூர், செல்வாநகர், பாரதிபுரம், ஜெயபுரம், பள்ளிக்குடா, புன்னைநீராவி போன்ற பகுதிகளில் புதிய உப தபாலகங்களை நிறுவ வேண்டியத் தேவை உள்ளது. இத்தகைய தேவைகள் அநேகமாக மீள்குடியேற்ற பகுதிகளுக்கு மிகவும் அத்தியவசியமாகவுள்ளமையை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அதேபோன்று அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எல்லைப் பகுதியான பொத்துவில், தாண்டியடி பகுதியில் உப தபாலகத்திற்கென நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் தற்போது சுமார் 23 வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும் இதுவரையில் செயற்படுத்தப்படாமல் இருப்பதாகத் தெரிய வருகின்றது.
இந்த உப தபாலகம் செயற்படாமை காரணமாக இப் பகுதியில் வசிக்கின்ற சுமார் 200க்கும் மேற்பட்ட முதியோர்கள் உள்ளிட்ட ஏனைய மக்கள் அரச உதவித் தொகைகளைப் பெறுவதற்காக சுமார் 20 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள திருக்கோவில், விநாயகபுரம், கோரக்களப்பு உப தபாலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
மேலும், சில உப தபாலகங்கள் தபாலகங்களாக தரம் உயர்த்தப்பட வேண்டியத் தேவையும் இருக்கின்றது. குறிப்பாக, யாழ் மாட்டத்தில் தாழையடி, கோண்டாவில் மல்லாகம், குருநகர் போன்ற உப தபாலகங்கள் இவற்றுள் குறிப்பிடத்தக்கவையாகும்.
மேலும், மன்னார் மாவட்டத்தில் முருங்கன் தபாலகக் கட்டிடத்தில் பொலிஸார் நிலை கொண்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. இதனை விடுவித்து, தபாலகத்தின் செயற்பாடுகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
முல்லைத்தீவு தபாலகமானது மாவட்ட அலுவலகத்திலேயே இன்னமும் செயற்பட்டு வருகின்ற நிலை காணப்படுகின்றது. எனவே, முல்லைத்தீவு தபாலகத்திற்கென தனியானதொரு கட்டிடம் அமைக்கப்பட வேண்டியத் தேவையும் இருக்கின்றது.
அத்துடன், வடக்கு மாகாணத்தில் தபால் துறை சார்நது இதுவரையில் நிரப்பப்படாத பல வெற்றிடங்கள் உண்டு. தொழில்வாய்ப்புகளின்றி பலர் வடக்கு மாகாணத்திலே இருக்கின்ற நிலையில், இவர்களைக் கொண்டு மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அத்துடன், யாழ்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் பழைய வாகனங்களே பயன்பாட்டில் இருப்பதாகத் தெரிய வருகின்றது. அதேபோன்று மன்னார் அஞ்சல் அத்தியட்சகரின் வாகனமும் பழைமையானதாகவே இருப்பதாகக் கூறப்படுகின்றது. எனவே, புதிய வாகனங்கள் வழங்குவது தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் அவதானமெடுக்க வேண்டும்.
எனவே, இத்தகைய விடயங்கள் தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் உடனடி அவதானங்களைச் செலுத்தி, உரிய நடவடிக்கைகளை எடுப்பார் என எதிர்பார்க்கின்றேன்.
மேலும், இந்த நாட்டில் தபால் சேவையினை தற்கால நவீன கேள்விகளுக்கேற்ப விஸ்தரித்து, மேற்கொள்ளப்படுவதற்கு உரிய அனைத்து ஏற்பாடுகளையும் எடுக்க வேண்டியதன் அவசியத்தையும், பணியாளர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளினதும் தொழில் ரீதியிலான பிரச்சினைகளைத் தீர்க்க வேணடியதன் அவசியத்தையும் வலியுறுத்தி விடைபெறுகின்றேன்.

Related posts:

அனைத்து இன மக்களையும் ‘இலங்கையர்கள்’ என மதிக்கின்ற எண்ணக்கரு முப்படையினருக்கு அவசியம் - நாடாளுமன்றத்...
இழப்பீடுகள் பாதிக்கப்பட்ட மக்களை உரிய காலத்தில் சென்றடையாமையே அவலங்கள் தொடரக் காரணம் - நாடாளுமன்றில்...
விவசாயத்துறை இன்னும் சில காலங்களில் தொல்பொருள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுவிடுமோ என்ற சந்தேகத்தை ...

வரிச் சுமைகளிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
மதவாத ரீதியில் மக்களை வழிநடத்த யாரேனும் முயற்சித்தால் நாடு அழிவுகளை சந்திக்க நேரிடும் – டக்ளஸ் எம்....
‘காலத்தை வென்ற மக்கள் நேய’ வரவு – செலவுத் திட்டம் கடற்றொழில் துறைக்கும் ஒரு பலமான தைரியத்தை தந்துள்ள...