4500 பணியாளர்களை நீக்கும் போயிங் நிறுவனம்!

Thursday, March 31st, 2016

உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் இந்த வருடத்தில் 4 ஆயிரத்து 500 பணியாளர்களை குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தெரியவருவதாவது –

புதிய விமானங்களுக்கான பதிவுகள் குறைந்திருப்பதன் காரணமாக போயிங் நிறுவனம் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி ஆயிரத்து 600 பணியிடங்கள் விருப்பு ஓய்வுத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் ஏனைய பணியிடங்கள் நீக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

வாடிக்கையாளர்கள் விமானங்களை கொள்வனவு செய்வது குறைந்து வருவதன் காரணமாக வணிக ரீதியான விமான தயாரிப்புப் பிரிவில் பெரும் பணி நீக்கம் மேற்கொள்ளப்படுகின்றது.இதன் காரணமாக நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் தமது பணியை இழக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இறுதியில் போயிங் நிறுவனத்தில் ஒரு இலட்சத்து 61 ஆயிரம் பேர் பணியாற்றிய நிலையில் இந்த பணிநீக்கத்தின் மூலம் 3 வீத பணியாளர்கள் வெளியேறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு போயிங் நிறுவனம் 762 விமானங்களைத் தயாரித்தது. எனினும் புதிய விமானங்களுக்கான பதிவுகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்காவிலிருந்து செயல்படும் இந்நிறுவனம், ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து கடும் போட்டியை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: