42 பத்திரிக்கையாளர்களுக்கு பிடியாணை!

Tuesday, July 26th, 2016
துருக்கியின் ஆட்சிக்கு எதிரான இராணுவ சதி முறியடிக்கப்பட்டதன் பின் தொடரும் புலனாய்வின் ஒரு பகுதியாக 42 பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

கடந்த ஒரு வாரமாக துருக்கியின் முக்கிய நகர சதுக்கங்களெல்லாம், 2003 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் அதிபர் எர்துவான் மற்றும் அவரது ஏகே கட்சியின் ஆதரவாளர்களால் நிரம்பி வழிந்தது.

ஆனால் நேற்றுமுன்தினம்(24) இரவு இஸ்தான்புல்லில் கூடிய பல்லாயிரக்கணக்கானவர்களில் பெரும்பாலானவர்கள் மதசார்பற்ற துருக்கியர்கள். ஜனநாயகத்துக்கு ஆதரவாக குழுமிய இவர்கள் இஸ்லாமியவாத கட்சியினரோடு தோளோடு தோள் நின்றனர்.

இங்கு பேசிய பிரதான பேச்சாளரான சிஎச் கட்சித்தலைவர் கமால் கலிஜ்தரோலுவின் உரை நாட்டின் அரச தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அரச ஆதரவு தொலைக்காட்சியில் இது ஒரு அபூர்வ நிகழ்வு.

தனது உரையில் அதிபரை அவர் நேரடியாக விமர்சிக்கவில்லை. ஆனால் சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்கும்படியும் பழிவாங்கும் போக்கில் நடக்க வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தார். “நாடுகளின் அரசுகள் முன்விரோதம், முன்கோபம் அல்லது பாரபட்சமாக ஆட்சி செய்யக்கூடாது. ஆட்சியை கவிழ்க்க இராணுவ சதி செய்தவர்களை சட்டத்திற்கு உட்பட்டு கையாளவேண்டும். ஒரு நாட்டு அரசின் நாணயத்துக்கும் நன் மதிப்புக்கும் அதுவே அடிப்படை. சித்திரவதை, அவமதித்தல், அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல் வழிகளை கடைபிடிப்பது இராணுவ சதி செய்தவர்களின் தரத்துக்கே அரசாங்கத்தையும் சீரழித்துவிடும்”, என்றார் கமால்.

இராணுவ சதிமுயற்சியை முறியடிப்பதில் துருக்கிய சமூகம் காட்டிய ஒற்றுமையின் உச்சம் இந்த பேரணி. அதேசமயம், இந்த பொதுநன்மைக்கான அணுகுமுறையை பாழாக்கிவிடாதீர்கள் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சியின் சார்பில் அதிபருக்கு விடுக்கப்பட்ட நாகரிகமான எச்சரிக்கையாகவும் இது அமைந்திருந்தது.

Related posts: