பெண்களுக்கான தடையை தளர்த்தியது ஈரான் !

Friday, October 11th, 2019


ஈரானில் கால்பந்தாட்ட போட்டிகளை மைதானங்களுக்கு சென்று பார்க்க பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

1981-ம் ஆண்டு முதல் ஈரானில் ஆண்கள் பங்கேற்கும் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை மைதானத்திற்கு சென்று பார்க்க பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சஹர் கோடயாரி (Sahar Khodayari) என்ற இளம் பெண் கடந்த மார்ச் மாதம் டெஹ்ரானில் நடைபெற்ற கால்பந்து போட்டியை காண ஆண் வேடமிட்டு மைதானத்துக்குள் நுழைய முயன்றார். ஆனால் மைதானத்தின் காவலாளிகள் அவரை அடையாளம் கண்டதால் கைது செய்யப்பட்டார்.இது ஈரான் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சஹர் கோடயாரிக்கு (Sahar Khodayari) ஆதரவாக போராட்டங்கள் வெடித்த நிலையில், சஹர் கோடயாரி (Sahar Khodayari) மீதான வழக்கின் இறுதி விசாரணை கடந்த மாதம் 12ம் திகதி நடந்தது. வழக்கில் சஹர் கோடயாரி (Sahar Khodayari)குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 6 மாதம் முதல் 2 வருடம் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என்று பேசப்பட்டது. இதனால் அச்சமடைந்த அவர் நீதிமன்றினுள்ளேயே தீக்குளித்து இறந்தார்.

இது ஈரான் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதோடு, விளையாட்டு மைதானங்களில் பெண்களை அனுமதிக்க கோரிய போராட்டமும் வலுப்பெற்றது. பல்வேறு கால்பந்தாட்ட அமைப்புகள் பெண்களுக்கு எதிரான ஈரானின் இந்நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தன.

மேலும் சர்வதேச கால்பந்தாட்ட அமைப்பு, ஈரான் தனது முடிவை திரும்பப் பெற்று பெண்களை மைதானத்துக்குள் அனுமதிக்க வேண்டும் இல்லையென்றால் ஈரான் அணி நீக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Related posts: