அவுஸ்திரேலியாவில் புயல் மழை !

Monday, January 20th, 2020


அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ ஏற்பட்ட கிழக்கு பகுதிகளில் கடும் மழை பெய்து வரும் நிலையிலும், அந்நாட்டின் காட்டுத் தீ நெருக்கடி அவ்வளவு சீக்கிரத்தில் முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீப நாட்களில் மழை பெய்தும் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா ஆகிய பகுதிகளில் 80 இடங்களில் தீ இன்னும் அடங்காமல் எரிந்து கொண்டிருக்கிறது.

மெல்பர்ன் மற்றும் கேன்பெராவில் வீசிய தீவிர புயல் காற்றால், கோல்ஃப் பந்து அளவிற்கு பனியை கண்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

காட்டுத் தீயால் சேதமான பல இடங்களில் மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் பெய்த மழையால் சில இடங்களில் தீ குறைந்துள்ளது.

அதே சமயம் வேகமாக வீசும் காற்றால், புழுதியை கிளம்பியுள்ளது. இதனால் மேகங்கள் புகை மூட்டமாகவும், வானம் கரு நிறத்திலும் காட்சியளிக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து எரியும் காட்டு தீயால் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2000 பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். 10 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பு தீக்கு இரையானது.

இது அதிக வெப்பநிலை, தீவிர வறட்சி மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த மழை, காட்டுத் தீ பரவிய இடங்களில் சற்று ஆறுதலாக இருந்தாலும், புயல் தீயணைப்பு பணிகளில் இடையூறுகளும் ஏற்பட்டுள்ளதாக விக்டோரியாவின் பிரீமியர், டேனியல் ஆண்ட்ரூ தெரிவித்துள்ளார்.

“காட்டுத் தீக்கான பருவநிலை முடிய நீண்டகாலம் உள்ளது. எனவே, மழை பெய்தாலும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விக்டோரியா மாநிலத்தின் மோசமான காட்டுத் தீ பருவமானது பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் ஆரம்பமாகும்.

அவுஸ்திரேலியா காட்டுத் தீ சம்பவத்தில், சுமார் 1 பில்லியன் விலங்குகள் உயிரிழந்திருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts: