வோஷிங்டன் மீது அணுகுண்டு வீசுவோம் – மிரட்டும் வட கொரியா!

Wednesday, August 24th, 2016

அமெரிக்க தலைநகரான வாஷிங்டன், தென் கொரியா தலைநகரான சியோல் ஆகிய இரு நகரங்கள் மீது அணுகுண்டு வீசி சாம்பலாக்குவோம் என வட கொரியா மிரட்டல் விடுத்துள்ளது.

ஐ.நா சபையின் எச்சரிக்கையை மீறி கடந்த சில மாதங்களில் வட கொரியா அரசு அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை செய்து உலக பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. வட கொரியாவின் அத்துமீறலை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாட்டு இராணுவ வீரர்களும் தென் கொரியாவில் நேற்று முதல் ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகிறனர்.

இதனை தொடர்ந்து அமெரிக்காவை சேர்ந்த 25 ஆயிரம் வீரர்களும் தென் கொரியாவை சேர்ந்த 50 ஆயிரம் வீரர்களும் இந்த பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் இந்த நடவடிக்கை வட கொரியாவிற்கு அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கடந்த வாரம் வட கொரியாவை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரும் நாட்டை விட்டு தப்பியுள்ளதும் வட கொரியா சர்வாதிகாரியான கிம்-யோங் அன்னிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வட கொரியா அரசாங்க ஊடகம் நேற்று அதிரடி மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளது.

அதில் ‘வட கொரியாவிற்கு அருகில் இராணுவ பயிற்சி மேற்கொண்டு வரும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் நடவடிக்கை வட கொரியாவிற்கு போர் மூளும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இப்பயிற்சி தொடர்ந்து நடைப்பெற்றால் அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் மீதும் தென் கொரியா தலைநகரான சியோல் மீது அணுகுண்டு வீசி இரு நகரங்களையும் சாம்பல் ஆக்குவோம்’ என மிரட்டல் விடுத்துள்ளது.

எனினும், தற்போது தென் கொரியாவில் நடைபெற்று வரும் ராணுவ பயிற்சியானது ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கும் என்றும், வட கொரியா மீது போர் தொடுக்கும் எண்ணத்தில் இப்பயிற்சியை தொடங்கவில்லை என அமெரிக்காவும் தென் கொரியாவும் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: