வெள்ளப் பெருக்கு: மியான்மரில் 54,000 பேர் வெளியேற்றம்!

Monday, July 30th, 2018

வெள்ளப் பெருக்கு அதிகரித்து வருவதையடுத்து பாதுகாப்பு கருதி மியான்மரில் 54,000 பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

வெள்ளத்தில் சிக்கி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அந்நாட்டின் சமூக நல பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது –

பேகோ உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையாக வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ள நீர் அதிகரித்து வருவதன் காரணமாக பாதுகாப்பு கருதி 54,000 பேர் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டும் ஒரு சிலர் தங்கள் வீடுகளின் மொட்டை மாடிகளில் தஞ்சம் புகுந்து இன்னும் வெளியேற மறுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கரிலான பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகியுள்ளன. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பல பகுதிகளில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளன. நாட்டின் தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய மியான்மர் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தங்குவதற்கு வசதியாக 163 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள உள்ளூர் நிர்வாகத்தினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ளோரை படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலமாக மீட்கும் நடவடிக்கையில் மீட்பு படையினர் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts: