வெப்பத்தின் உக்கிரத்தால் பாடசாலைகளுக்கு  விடுமுறை!

Saturday, April 16th, 2016
கோடை வெயில் அதிகமாக உள்ளதால் தெலுங்கானாவில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என தெலுங்கானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் இந்த ஆண்டு வரலாறு காணாத வெயில் அடிக்கும் என்று வானிலை இலாகாவினர் எச்சரித்துள்ளனர்.இந்த ஆண்டு தெலுங்கானா, கர்நாடகா, மராட்டியம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிக, மிக அதிகமாக உள்ளது.

குறிப்பாக தெலுங்கானா மாநிலத்தில் வெயில் மக்களை வறுத்தெடுக்கிறது. காலை 9 மணிக்கெல்லாம் வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கி விடுகிறது. பிற்பகல் 4 மணி வரை வெயில் உக்கிரம் நீடிக்கிறது. அம்மாநிலத்தில் அனல் காற்று வீசுவதால் கடந்த சில தினங்களில் 50–க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகளை விரைந்து முடிக்க தெலுங்கானா அரசு உத்தரவிட்டது. வழக்கமாக அம்மாநிலத்தில் ஏப்ரல் இறுதியில் இருந்து ஜூன் முதல் வாரம் வரை கோடை விடுமுறை விடுவார்கள்.

இந்த ஆண்டு கோடை வெயில் இப்போதே அதிகமாக உள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (16–ம் திகதி) முதல் விடுமுறை விட தெலுங்கானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இன்று தொடங்கி ஜூன் மாதம் 12–ம் திகதி வரை மாணவ – மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட கூடாது என்றும் தெலுங்கானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது

Related posts: