விமான பயணிகளுக்கு புதிய விதிமுறை அறிமுகமாகிறது!

Sunday, May 7th, 2017

விதிமுறைகளை மீறும் பயணிகளுக்கு 2 ஆண்டுகள் வரை உள்நாட்டு விமானங்களில் பயணிப்பதற்குத் தடை விதிக்க வகை செய்யும் புதிய விதிமுறைகள் அடங்கிய வரைவு அறிக்கையை இந்திய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அண்மையில் ஏர்-இந்தியா விமானத்தில் தாம் முன்பதிவு செய்திருந்த ‘பிசினஸ்’ வகுப்பில் இருக்கை ஒதுக்காமல் ‘எகானமி’ வகுப்பில் இருக்கை ஒதுக்கீடு செய்ததால் ஆத்திரமடைந்த சிவசேனை எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் விமான ஊழியரை காலணியால் தாக்கினார்.

இதனால், அவருக்கு சில நாள்கள் வரை உள்நாட்டு விமானங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர் மன்னிப்புக் கேட்டவுடன் அந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக விமானப் போக்குரவத்துத் துறை அமைச்சகம் புதிய விதிமுறைகள் அடங்கிய வரைவு அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

அதன்படி, விமானத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள், விமான ஊழியர்களை வசைச் சொல்லைப் பயன்படுத்தி திட்டுபவர்கள், விமான ஊழியர்களுக்கு பாலியல் ரீதியிலான தொல்லை கொடுப்பவர்கள் மற்றும் விமானத்தில் உள்ள பொருள்களை சேதப்படுத்துபவர்கள் ஆகியோருக்கு 3 மாதம் முதல் 2 ஆண்டு வரை உள்நாட்டு விமானத்தில் பயணிக்க தடை விதிக்க முடியும்.

இது குறித்து மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறுகையில், இது போன்ற விதிமுறைகள் உலகில் வேறு எந்தவொரு நாட்டிலும் உருவாக்கப்படவில்லை என்றார்.

இது தொடர்பாக அந்தத் துறையின் செயலர் ஆர்.என்.சௌபே கூறுகையில், ஒரு விமான நிறுவனம் ஒருவரை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு தடை செய்திருந்தால், அதே காலக்கட்டத்துக்கு மற்ற விமான நிறுவனங்களும் தடை செய்யலாம். அதே நேரம் இது கட்டாயமல்ல’ என்றார்.

இந்த புதிய விதிமுறைகள் பொதுமக்களின் பார்வைக்காக 30 நாள் வைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக கருத்துகளையும், பின்னூட்டங்களையும் அவர்கள் அளிக்கலாம். திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதி வரைவு அறிக்கையை ஜூன் 30ம் தேதி அன்று மத்திய அரசு வெளியிடும்.

Related posts: