விடைபெற்றது பராலிம்பிக் போட்டிகள்!

விசேட தேவையுடைவர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகளான பராலிம்பிக் போட்டிகளில் 2016ஆம் ஆண்டுக்கான போட்டிகள், வண்ணமயமான வாண வேடிக்கைகளுடனும் இசையோடும் கண்ணீரோடும் நிறைவுக்கு வந்தன.
இவ்வாண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரேஸிலில் இடம்பெறவிருந்த போது, ஒலிம்பிக் போட்டிகளும் பராலிம்பிக் போட்டிகளும் வெற்றிபெறுமா என்ற சந்தேகம் காணப்பட்டது. ஒலிம்பிக் போட்டிகள் வெற்றியடைந்த நிலையில், பராலிம்பிக் போட்டிகள் தொடர்பில் கவனம் திரும்பியது. தற்போது, அந்தப் போட்டிகளும் எதிர்பார்ப்பை மீறி வெற்றிபெற்று விடைபெற்றன.
இலங்கை நேரப்படி நேற்றுக் காலை இடம்பெற்ற நிறைவுபெறும் நிகழ்வுகள், மார்க்கான கால்பந்தாட்ட விளையாட்டரங்கில் இடம்பெற்றன. அரங்கம் நிறைந்திருந்த இரசிகர்கள், தங்கள் நாட்டுக்குப் புகழைப் பெற்றுக் கொடுத்த போட்டிகளின் நிறைவைக் கண்டுகளித்தனர்.
போட்டிகளின் ஆரம்பத்தில், கைகளின்றி பிரேஸிலில் பிறந்து, தற்போது இசைக் கலைஞராக மாறியிருக்கும் ஜொனதன் பஸ்டொஸ் என்பவரின் கிற்றார் இசை, அங்கிருந்தோருக்கு விருந்தாக அமைந்தது. அதைத் தொடர்ந்து, வண்ணமிகு வாண வேடிக்கைகளும் அலங்காரங்களும் அரங்கை நிறைத்தன.
இவற்றுக்கு மத்தியில், கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற போட்டிகளில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி மரணமடைந்த, ஈரானைச் சேர்ந்த சைக்கிளோட்டியான சரப்ராஸ் பாமான் கொல்பர்நெஸாத்துக்கு அஞ்சலி செலுத்துமுகமாக, ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தப் போட்டிகள், வெற்றிகரமாக நிறைவடைந்தமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த றியோ ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் கார்லொஸ் நுஸ்மான், தங்கள் மீது ஏராளமான சந்தேகங்கள் காணப்பட்டதை ஏற்றுக் கொண்ட போதிலும், வெற்றிகரமாக இவற்றை நிறைவுசெய்ய முடிந்தமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
இம்முறை இடம்பெற்ற போட்டிகளில் 107 தங்கப் பதக்கங்கள், 81 வெள்ளிப் பதக்கங்கள், 51 வெண்கலப் பதக்கங்கள் ஆகியவற்றைக் குவித்த சீனா, முதலாவது இடத்தை இலகுவாகக் கைப்பற்றிக் கொண்டது.
இலங்கைக்கு ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்த அதேவேளை, அயல்நாடான இந்தியா, 2 தங்கங்கள், 1 வெள்ளி, 1 வெண்கலம் உள்ளடங்கலாக 4 பதக்கங்களைப் பெற்று, 43ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|