கடினமான முடிவுகளை எடுக்க தயங்க மாட்டேன் – இந்தியப் பிரதமர் மோடி!

Sunday, December 25th, 2016

தேச நலன் கருதி கடினமான முடிவுகளை எடுப்பதற்கு மத்திய அரசு தயங்காது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதன்மூலம் மத்திய அரசு மேலும் பல்வேறு தீவிர சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதை அவர் சூசகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ரூ.1.06 லட்சம் கோடி மதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்தார். அதன்படிஇ மும்பை அருகே செபி அமைப்பின் தேசிய பங்குச்சந்தை நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கல்வி மற்றும் பயிற்சி மையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நீண்டகால கண்ணோட்டத்துடன் கூடிய மேலும் பல கொள்கைகளை மத்திய அரசு வெளியிடவுள்ளது. அந்த கொள்கை நிலையானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். அது நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலு சேர்க்கும்.

மத்திய அரசு தொடர்ந்து ஆக்கப்பூர்வமான மற்றும் விவேகமான பொருளாதார கொள்கைகளை பின்பற்றும். அரசியல் லாபத்துக்காக குறுகிய கண்ணோட்டம் கொண்ட முடிவுகளை மத்திய அரசு எடுக்காது.

நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.500 ரூ.1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவது என்பது கடினமான முடிவுதான். இந்த முடிவு பொது மக்களுக்கு குறுகிய காலத்துக்கு சில வேதனைகளைத் தரும்; எனினும் இந்நடவடிக்கையால் நாட்டு மக்களுக்கு நீண்ட கால பலன்கள் கிடைக்கும்.

“மூலதன சந்தைகள் மீது அதிக அளவு வரி’: மூலதனச் சந்தைகள் மீது அதிக அளவு வரி விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நிதிச் சந்தைகள் மூலம் அதிகம் லாபம் அடைவோர் வரிகள் மூலம் தேசத்தின் கட்டமைப்புக்கு நிச்சயம் பங்களிக்க வேண்டும். மூலதனச் சந்தைகள் மீதான வரியை அதிகரிக்கும் விவகாரத்தில் நியாயமான பயனளிக்கக்கூடிய மற்றும் வெளிப்படையான ரீதியில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அது நியாயமானதாகவும் ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்கும்.

பிரதமராக நான் பதவியேற்றபோது நடப்பு கணக்கு பற்றாக்குறை நிதிப் பற்றாக்குறை மிகவும் மோசமான நிலையில் இருந்தன. பணவீக்கமும் இரட்டை இலக்கத்தில் இருந்தது. அன்னிய செலாவணி கையிருப்பு மிக குறைவாகவே இருந்தது.

எனது அரசு பதவியேற்ற பிறகு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் இருண்டு கிடக்கும் உலக பொருளாதாரத்துக்கு மத்தியில் நமது நாட்டின் பொருளாதார நிலை பிரகாசமாக ஒளிவீசுகிறது. மிகப்பெரிய பொருளாதார சக்திகளுக்கு மத்தியில் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஒரு சந்தையின் வெற்றி என்பது லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு பயனிக்கும் வகையில் இருப்பதுதான். வெற்றிக்காக மேற்கொள்ளப்படும் உண்மையான நடவடிக்கையால் கிராமங்களே பயனடைய வேண்டும்; தலால் தெருவோ (மும்பை பங்குச் சந்தை அமைந்துள்ள இடம்) அல்லது தில்லி லூதியன்ஸ் பகுதியோ பயனடையக் கூடாது.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் முன்கூட்டியே தாக்கல் செய்யப்படுவது உற்பத்தி துறைகளுக்கு போதிய நிதிஆதாரங்கள் கிடைப்பதை உறுதி செய்து உற்பத்தி திறனை மேம்படுத்த உதவும். இதேபோல் நாட்டின் மிகப்பெரிய வரிச்சீர்திருத்த நடவடிக்கையாக கருதப்படும் ஜிஎஸ்டி சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று நம்புகிறேன் என்றார் மோடி.

மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

நாட்டு மக்கள் 125 கோடி பேரின் மனநிலையை தவறு செய்தவர்கள் குறைத்து மதிப்பிடக் கூடாது. மத்திய அரசு நடவடிக்கையைக் கண்டு நீங்கள் அச்சப்படலாம். இதுவொரு சுத்தப்படுத்தும் நடவடிக்கையாகும்.

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் முடிவு எடுக்கப்பட்ட 50 நாள்களுக்குப் பிறகுஇ நேர்மையான மக்களின் பிரச்னைகள் குறையத் தொடங்கும். அதேநேரத்தில் தவறு செய்தவர்களின் பிரச்னைகள் அதிகரிக்கத் தொடங்கும்.

கருப்புப் பண விவகாரத்தில் மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8-ஆம் தேதி மிகப்பெரிய முடிவை எடுத்தது. இதனால் 125 கோடி மக்களும் துன்பத்தை சந்தித்தனர். எனினும் மத்திய அரசுக்கு ஆதரவளிப்பதை அவர்கள் நிறுத்தவில்லை.

கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக நாட்டை ஆட்சி செய்வதற்கு எங்களுக்கு மக்கள் பெரும்பான்மை பலத்தை அளித்துள்ளனர். ஊழல் கருப்புப் பணம் ஆகியவைகளுக்கு எதிரான எங்களது போருக்கு ஆதரவாக மக்கள் இந்த தீர்ப்பளித்துள்ளனர். எனவேஇ கருப்புப் பணத்துக்கு எதிரான போரில் வெற்றி கிடைக்கும் வரையிலும் அதை நிறுத்த மாட்டோம்.

மத்திய அரசு தொடுத்துள்ள போர் சாதாரணமானது அல்ல. முன்பு யாரெல்லாம் இனிப்புகளை உண்டார்களோ அவர்கள் மத்திய அரசின் நடவடிக்கையை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். இதை மத்திய அரசு அனுமதிக்காது. முந்தைய அரசுகளின் ஆட்சி காலத்தில் ஊழல்களால் பயனடைந்தோர் அதற்கான விலையை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார் பிரதமர் மோடி.

modi8

Related posts: